சில்லுக்கருப்பட்டி - விமர்சனம்

26 Dec 2019
ஒரே படத்தில் நான்கு விதமான கதைகள், ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு நடிகர்கள், நடிகைகள். அவர்களுக்குள் வெளிப்படும் காதல் உணர்வுதான் இந்த ‘சில்லுக்கருப்பட்டி’. கதை பின்க் பேக் பதின்ம வயதில் இருக்கும் குப்பை பொறுக்கும் ஒரு ஏழை சிறுவன். அவனுக்குக் கிடைக்கும் ஒரு பணக்கார வீட்டுச் சிறுமியின் மோதிரத்தைத் திருப்பித் தர நினைக்கிறான். அதை அவன் எப்படி திருப்பிக் கொடுத்தான், அதற்கு பதிலுக்கு அந்த சிறுமி என்ன செய்தாள் என்பதுதான் ‘பின்க் பேக்’. ‘மாஞ்சா’ என்றற குப்பை பொறுக்கும் ஏழை சிறுவனாக ராகுல். பணக்கார வீட்டு சிறுமி மிட்டி-யாக சாரா. ஒரு பக்கம் குப்பை மேடு, குடிசை, மறுபக்கம் மாட மாளிகை என இருவித வாழ்வியலில் இருக்கும் இரண்டு அன்பு உள்ளங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை இது. காக்கா கடி ஐ.டி. வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞன் மணிகண்டன். அவருக்கு கேன்சர் என அதிர்ச்சியளிக்கிறார் டாக்டர். வாழ்க்கை அவ்வளவுதான் என நினைக்கும் அவரது வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் விதமாக வருகிறார் நிவேதிதா சதீஷ். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதுதான் ‘காக்கா கடி’. கஷ்டப்படும் நிலையில் இருக்கும் போது உண்மையில் ஆறுதல் சொல்ல வருபவர் மீது நமக்கு நேசம் தானாக வரும். ஒருவரிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயம் நம்மை ஈர்க்கும். அப்படியான இரண்டு இந்தக் கதையில் வரும் மணிகண்டன், நிவேதிதா ஆகியோருக்கு வருகிறது. முன்பின் தெரியாத இருவர் எப்படி காதலில் விழுவார்கள் என்பதை அவ்வளவு யதார்த்தமாய் சொல்லியிருக்கும் கதை இது. டர்ட்டிள்ஸ் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழும் வயதான பெண்மணி லீலா சாம்சன். அவரைப் பார்க்கும் வயதான ஆண் ஸ்ரீராமிற்கு லீலா மீது ஒரு ஈர்ப்பு. ஒரு கட்டத்தில் தன் காதலை சொல்லி விடுகிறார். வயதானவர்களுக்குள் காதலா என ஆச்சரியத்துடன் நாம் பார்க்க, அதற்கான காரணத்தை அழகுற சொல்லியிருக்கிறார் இயக்குனர். இப்படி ஒரு காதலை இதற்கு முன் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோமா என யோசிக்க வைக்கிறார்கள். லீலா சாம்சனை சில படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், ஸ்ரீராம்-ஐ இப்போதுதான் பார்க்கிறோம். அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். அந்த வயதில் காதலைச் சொல்வதில் எவ்வளவு கண்ணியம் வேண்டும். அதை அவ்வளவு இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார். ஹே..அம்மு   எப்போதும் வேலை, வேலை என்று சுற்றும் சமுத்திரக்கனி. அவரது மனைவி சுனைனா, இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள். இருப்பினும் மனைவி சுனைனாவிடம் காதலில்லாமல் இருக்கிறார் சமுத்திரக்கனி, ஆனால், காமம் இருக்கிறது. சுனைனா எதிர்பார்ப்பதோ காமம் அல்ல காதல். அந்தக் காதலை கணவர் சமுத்திரக்கனிக்கு எப்படி புரிய வைக்கிறார் என்பதுதான் இந்தக் கதை. திருமணத்திற்கு முன்புதான் காதலா, திருமணத்திற்குப் பின்பும் காதல் இருக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட காதல் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கும் கதை இது. திருமணம் முடிந்து குழந்தை பெற்றவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் தாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கண்டிப்பாகத் திருத்திக் கொள்வார்கள். ஒரு படத்தைப் பார்க்கும் போது ஒரே கதையில் வரும் சுவாரசியங்களை விட ஒரே படத்தில் இப்படி நான்கு கதைகளை, வெவ்வேறு எண்ணம் கொண்ட கதாபாத்திரங்களுடன் பார்ப்பது தனி உணர்வைத் தருகிறது. வித்தியாசமான முயற்சிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். அது போல இந்தப் படத்தையும் வரவேற்பார்கள் என எதிர்பார்க்கலாம். சிறிய குறைகள் சில இருந்தாலும் அதைப் பெரிதாக சொல்ல முடியாமல் மற்ற நிறைவான விஷயங்கள் முன்னுக்கு வந்துவிடுகின்றன. படத்தில் உள்ளவற்றை உணர்ந்து எழுதிய ஒருவரால்தான் இப்படி ஒரு படத்தைக் கொடுக்க முடியும், அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். அவரே படத்தொகுப்பையும் செய்திருக்கிறார். இசையமைப்பாளர் பிரதீப் குமார், ஒளிப்பதிவாளர்கள் அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்னமூர்த்தி இயக்குனருக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறார்கள். 2019 வருட முடிவில் ஒரு சிறந்த படத்தைப் பார்த்த திருப்பி வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்திற்கு தாராளமாகச் செல்லலாம்.

Tags: sillukarupatti

Share via: