ஹீரோ - விமர்சனம்
22 Dec 2019
கதை
சென்னையில் போலி சான்றிதழ்களை அச்சடித்துக் கொடுக்கும் வேலை, இஞ்சினியரிங், மருத்துவக் கல்லூரிகளில் கமிஷனுக்கு மாணவ, மாணவிகளைப் பிடித்துக் கொடுக்கும் வேலைகளைச் செய்பவர் சிவகார்த்திகேயன். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று விரும்பிய அவர் பகுதியைச் சேர்ந்த இவானா, ஒரு புதிய கண்டுபிடிப்பு விஷயத்தில் ‘திருடி’ என்று சொல்லப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறார். திறமைசாலியான இவானாவின் தற்கொலைக்கு நியாயம் கிடைக்க, இவானாவின் மாஸ்டர் அர்ஜுன் ஆலோசனைப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் சிவகார்த்திகேயன். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
வழக்கம் போல் பக்கத்து வீட்டுப் பையன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன். பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும், அப்பாவின் உடல்நிலை காரணமாக சான்றிதழை விற்கிறார். அதிலிருந்தே அது போன்ற வேலைகளில் ஈடுபட்டு ‘பிராடு’ ஆக மாறுகிறார். இடைவேளை வரை சராசரியான இளைஞராக இருப்பவர், பின்னர் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். முந்தைய படங்களுடன் ஒப்பிடும் போது ஆக்ஷன் ஹீரோவாக ஒரு படி முன்னேயியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன். அதிக வேலையில்லை, இவருடைய கதாபாத்திரத்தை இன்னும் கூடுதலான காட்சிகள் வரும்படி சேர்த்திருக்கலாம்.
சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக மாற்றும் மாஸ்டர் ஆக அர்ஜுன். அவர் சொல்லிக் கொடுப்பது போல பள்ளி, விரும்பியதைப் படிக்கும் கல்வி முறை இருந்தால் இந்த நாடு இன்னும் முன்னேறும் என்றே தோன்றுகிறது.
வில்லனாக அபய் தியோல், ஒரு கார்ப்பரேட் ஏஜென்ட் ஆக மிரட்டுகிறார். இதற்கு முன் இம்மாதிரியான சில ஹை-பை வில்லன்களைப் பார்த்திருந்தாலும் தனி முத்திரை பதிக்கிறார் அபய்.
இசை, மற்றவை
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. ஒளிப்பதிவு, அரங்க அமைப்புகள் பிரம்மாண்டமான உணர்வைத் தருகின்றன.