தம்பி - விமர்சனம்
22 Dec 2019
கதை
மேட்டுப்பாளையம் பகுதியில் ஊரே மதிக்கும் அரசியல்வாதி சத்யராஜ். மனைவி சீதா, ஒரே மகள் ஜோதிகா. அவருடைய மகன் ஒருவன் 15 வருடங்களுக்கு முன் காணாமல் போகிறார். கோவா போலீஸைச் சேர்ந்த இளவரசு காணாமல் போன மகன் கார்த்தியை கண்டுபிடித்து சத்யராஜிடம் ஒப்படைக்கிறார். மேட்டுப்பாளையம் வந்து குடும்பத்துடன் இணையும் கார்த்தியை யாரோ கொல்ல முயற்சிக்கிறார்கள். கார்த்தி உண்மையில் யார், அவரை ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள், அதன் பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிப்பு
வழக்கமான தமிழ்ப் படம் போன்று படமில்லை. ஒரு மலையாளப் படத்தைப் பார்க்கும் உணர்வும் அடிக்கடி வரும். நடிப்பில் அனுபவம் வாய்ந்த சத்யராஜ் அப்பாவாக நடித்திருக்கிறார். அவர் மீது ஒரு சஸ்பென்ஸை வைத்து அதை அப்படியே திருப்புகிறார்கள்.
கோவாவைச் சேர்ந்த கார்த்தி ஒரு லோக்கல் திருடன், ஏமாற்றுவதில் கில்லாடி என சில காட்சிகளில் காட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்தான் சத்யராஜின் மகனாக சத்யராஜ் வீட்டுக்குள் நுழைகிறார். அதற்கு இன்ஸ்பெக்டர் இளவரசு உதவி செய்கிறார். ஏழை குழந்தைகளக்கு வீட்டிலேயே பாடம் சொல்லித் தருபவராக ஜோதிகா. சத்யராஜ், கார்த்தி இருவரது நடிப்புப் போட்டிக்குள் அவரும் முடிந்த அளவு கூடவே வருகிறார். கார்த்தியை வந்து அடிக்கடி காதலித்து விட்டு பின் கதையில் காணாமல் போய்விடுகிறார் நிகிலா விமல்.
குட்டிப் பையன் அஸ்வந்த் தான் அடிக்கடி சிரிக்க வைக்கிறார். அவரை அநியாயமாக சாகடித்துவிடுகிறார்கள். வில்லனாக ஒருவர் வேண்டும் என்பதற்காக பாலா. பாட்டியாக சௌகார் ஜானகி, பேசாமல் இருந்தாலும் பார்வையாலேயே அசத்துகிறார்.
இசை, மற்றவை
96 படத்தில் பாடல்களாலும், பின்னணி இசையாலும் பாராட்டைப் பெற்ற கோவிந்த் வசந்தா இந்தப் படத்தில் ஏமாற்றியிருக்கிறார். ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு ஊட்டி மலையை அழகழகாய் சுற்றி வந்திருக்கிறது.