சாம்பியன் - விமர்சனம்
15 Dec 2019
கதை
சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த விஷ்வாவுக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது பேராசை. ஆனால், அவருடைய அம்மா கால்பந்து விளையாடக் கூடாதென தடுக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் விளையாடி பள்ளி மற்றும் கல்லூரி அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு முன்னேறுகிறார் விஷ்வா. பிரபல கோச் நரேன் நடத்து அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பிக்கிறார். முக்கிய போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தேர்வாகும் சமயம், தன் அப்பா கொலை செய்யப்பட்டதுதான் இறந்தார் என்ற உண்மை விஷ்வாவுக்குத் தெரிய வருகிறது. கால்பந்து விளையாடுவதை விட அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.
நடிப்பு
அறிமுக நாயகன் விஷ்வா, முதல் படத்திலேயே பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து பொருத்தமாக நடித்திருக்கிறார். கால்பந்து விளையாட ஒரு வருடம் பயிற்சி எடுத்தாராம். அதன் பலன் திரையில் தெரிகிறது. அடுத்தடுத்து நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.
விஷ்வாவுக்கு அடுத்து படத்தில் கோச் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நரேன். அந்த கோச் ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. வில்லனாக ஸ்டன் சிவா, வட சென்னை பகுதி கவுன்சிலர் மற்றும் ரவுடியாக மிரட்டுகிறார்.
சௌமிகா, மிருணாளினி என இரண்டு ஹீரோயின்கள். சினிமாத்தனமில்லாமல் இருக்கிறார்கள், நடிக்கிறார்கள்.
இசை, மற்றவை
அரோல் கொரேலி இசையில் பின்னணி இசை குறிப்பிடும்படி உள்ளது. கால்பந்தாட்டக் காட்சிகள், கதை நகரும் மற்ற இடங்கள் என உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறது சுஜித் சாரங் ஒளிப்பதிவு.