காளிதாஸ் - விமர்சனம்

14 Dec 2019
கதை சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடி மீதிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர் பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். டெபுடி கமிஷனர் உத்தரவுப்படி அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணைக்கு தலைமை ஏற்கிறார். இரவு, பகல் பார்க்காமல் போலீசார் விசாரணையைத் தொடர்கிறார்கள். நான்காவதாக ஒரு கொலை நடக்கும் போது ஒரு துப்பு கிடைக்கிறது. அது என்ன, கொலையாளி யார் என்பதை நாம் எதிர்பார்க்காத கிளைமாக்சுடன் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில். நடிப்பு இன்ஸ்பெக்டர் ஆக பரத். ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் முத்திரை பதிக்கும்படியான கதாபாத்திரம். எந்தவித அலட்டலும் இல்லாமல், போலீஸ் என்ற கர்வம் இல்லாமல், ஒரு யதார்த்தமான இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பரத்தின் நடிப்பு படம் பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும். அசிஸ்டென்ட் கமிஷனர் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன், மிடுக்கான நடிப்பு. பரத்தின் மனைவியாக ஆன் ஷீத்தல். ஒரு நடுத்தரக் குடும்பத்து மனைவி, தன் கணவனிடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பாரோ அதை எதிர்பார்க்கும் ஒரு இயல்பான கதாபாத்திரம். அறிமுகப் படத்திலேயே அசத்துகிறார் ஆன். ஆதவ் கண்ணதாசன் கதாபாத்திரம் மீதுதான் நம் அனைவரின் சந்தேகமும் விழுகிறது. அவர் கொலையாளி ஆக இருப்பாரோ என்ற சந்தேகத்தை பார்வையாளர்களுக்கு தன் திரைக்கதை மூலம் அழுத்தமாய் உணர வைக்கிறார் இயக்குனர். ஆதவ்வின் நடிப்பும் ஆகா சொல்ல வைக்கிறது. இசை, மற்றவை த்ரில்லர் படம் என்றால் பின்னணி இசை மிக முக்கியம். அதை உணர்ந்து காட்சிகளின் பரபரப்பை மேலும் கூட்டும் வகையில் இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, கொலை நடக்கும் இடங்களை பல வித கோணங்களில் படம் பிடித்து காட்சிகள் மூலம் பரபரப்பைக் கூட்டுகிறார். காட்சிகளின் தன்மை சிறிதும் குறையாமல் தெளிவான படத் தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் புவன் சீனிவாசன்.

+

கதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம்

-

பெரிதாக எதுவுமில்லை

Share via: