இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு - விமர்சனம்

08 Dec 2019
கதை இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. மாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். நடிப்பு தனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார். நாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம். காயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார். இசை, மற்றவை தென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.

+

புதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு

-

இடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும்  சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.

Share via: