சைக்கோ, யாருக்காக எடுத்த படம் - மிஷ்கின் விளக்கம்
02 Feb 2020
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘சைக்கோ’.
இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது...
“வெற்றிப்படம் தந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப் படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான்.
இந்த படத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும் நன்றி. நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது.
இந்தப் படத்தில் அனைவருமே உதவியாளர்கள் போலவே வேலை செய்தார்கள். நடிகர் ராஜ்குமாரை முன்னால் இருந்தே தெரியும் என்னை விட இந்தப் படத்திற்காக அதிகம் உழைத்தது அவர்தான். அவருக்கு வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்தது நல்லது.
படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. சைக்கோ 2 கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
மிஷ்கின் பேசுகையில்,
“சித்திரம் பேசுதடி படம் முதல் இன்று வரை, என்னை நல்ல படங்களில் ஆதரித்தும், மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி.
என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக் காரணம். அவருக்கு என் நன்றி.
என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன்.
என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை. ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை. சிங்கம் புலி மிகச்சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதி கூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி.
நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி. என் எல்லா படங்களிலும் பாடல் எழுதுபவர் கபிலன். தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இந்தப் படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர்.
எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த எடிட்டராக வருவார். ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன். கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாகச் செய்வான். அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப் படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான்.
பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார். என் வாழ்நாள் கனவு. அவரால் முழுதாக வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான்.
அதிதி கூட எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி,” என்றார்.
Tags: psycho, mysskin, udhayanidhi stalin,