கமர்ஷியல் படமாக வரும் ‘சீறு’
02 Feb 2020
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், ஐசரி கணேஷ் தயாரிக்க, ரத்னசிவா இயக்கத்தில், இமான்இசையமைப்பில், ஜீவா, ரியா சுமன், நவ்திப், வருண், காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சீறு’.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இயக்குநர் ரத்னசிவா பேசுகையில்,
“இது எனது மூன்றாவது படம். முதலில் அஷ்வினிடம் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார்.
ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார். எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மாணிப்பவராக அவர் இருக்கிறார். அஷ்வின் மொத்த படத்திற்கும் மிகப் பெரும் ஆதரவாக இருந்தார்.
நான் ஜீவா சாரின் ரசிகன். 24 மணி நேரமும் சிரித்துகொண்டே, அருகில் இருக்கிறவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். சீரியஸ் காட்சி வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுவார். அவர் ஒரு அருமையான நடிகர், அவருக்கு நன்றி. வருண் ஜெயிக்க வேண்டும் என்பதற்கு வெறியாக உழைக்கத் தயாராக இருக்கும் ஆள். இந்த கேரக்டருக்கு நியாயம் செய்ய மொத்தமாக உடலை மாற்றி வந்தார். மிகப் பெரிய நடிகராக வருவார்.
சாந்தினி முதலில் நடிக்க மறுத்தார் ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க ஒத்துக்கொண்டார். இந்தப்படத்தில் எல்லோர் மனதிலும் கண்டிப்பாக நிற்பார். இமான் சார் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் யாருடன் படம் செய்தாலும் கண்டிப்பாக வெற்றிப் பாடலாகத் தான் இருக்கும்.
என் தொழில்நுட்ப கலைஞர்கள் என் நண்பர்கள் போன்றவர்கள், கடுமையாக உழைத்துள்ளார்கள். ஹீரோயினுக்கு தமிழ் தெரியாது. ஆனால் அருமையாக நடித்துள்ளார். ‘வா வாசுகி’ பாடல் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்தப் படம் நல்ல கருத்துள்ள படம்,” என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில்,
“ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய வேலை. இங்கு நிறைய படத்திற்காக வந்துள்ளேன். படம் நல்லா இல்லை என்றால் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் இன்று மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கிறது. இந்தப் படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார். அவ்வளவு திறமையானவர்.
இந்தப் படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லா விதத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். 83 பட புரமோஷனில் ‘கச்சேரி, கச்சேரி’ பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார். இமான் சார் பாடல்கள் பற்றி அவர் பெருமையாகப் பேசினார்.
இந்தப் படத்தில் ‘வா வாசுகி’ எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் படத்திற்கு இமான் பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார்.
வேல்ஸ் நிறுவனத்தில் நடித்தது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய படங்கள் உங்களுடன் செய்ய வேண்டும். வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர், ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார்.
ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம் சொன்னார். ஆனால் அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களும் கலந்து இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் நன்றி,” என்றார்.
சீறு படம் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகிறது
Tags: seeru, jeeva, rathna siva