யூத் - விமர்சனம்

19 Mar 2026

இளம் வயதினரின் காதல், படிப்பு, குடும்பப் பிணைப்பு ஆகியவற்றை நேர்த்தியாகப் பின்னி, மனதைத் தொடும் கதையாக வந்திருக்கிறது ‘யூத்’. கென் கருணாஸ் நடித்து இயக்கிய இந்தப் படம், பள்ளி மாணவர்களின் உலகை மிக அழகாகப் பிரதிபலிக்கிறது.

காதல் மயக்கத்தில் மிதக்கும் இளைஞனுக்கு வாழ்க்கையின் உண்மையான முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தக் கதை, சிரிப்பும், கண்ணீரும், உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்ததாக இருக்கிறது. பழைய கதை மாதிரி தோன்றினாலும், புதிய பாணியில் சொல்லப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை ஒரு நிமிடம் கூட அலுத்துப் போகாமல் பிடித்து வைக்கிறது.

10-ம் வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் கென் கருணாஸ், 11-ம் வகுப்பில் படிப்பை அலட்சியம் செய்துவிட்டு காதலில் முழுகி விடுகிறார். அப்பாவின் அக்கறையையும், அம்மாவின் அளவற்ற நம்பிக்கையையும் புறக்கணித்து, வயது கோளாறில் மூழ்கி, 12-ம் வகுப்பு முடிவதற்குள் மூன்று காதல்களைத் தாண்டுகிறார். “காதல் தான் வாழ்க்கை” என்ற எண்ணத்தில் பயணிக்கும் இவருக்கு, படிப்பும் குடும்பமும்தான் உண்மையான அர்த்தம் என்ற உண்மையை உணர்த்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்கிறது. அந்தத் திருப்புமுனையின் மூலம் அவரது வாழ்க்கை முற்றிலும் திசைமாறும் விதத்தை, இளைஞர்கள் ரசிக்கும் பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கென் கருணாஸ்.

பள்ளி மாணவனாக கச்சிதமாகப் பொருந்தும் கென் கருணாஸ், காமெடி, உணர்ச்சி, துள்ளல் என அனைத்துத் துறைகளிலும் சமமாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். விஜய், தனுஷ், சிம்பு போன்றவர்களின் நடிப்பு லேசான தொனி தெரிந்தாலும், தன் தனித்துவமான உடல் மொழியாலும், உற்சாகமான ஆற்றலாலும் படம் முழுவதையும் யூத்புல்லாக நகர்த்திச் செல்கிறார்.

அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகிய மூன்று நாயகிகளும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு காதல், குறும்பு, பாசம் என மூன்று விதமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நாயகனின் தந்தையாக சூரஜ் வெஞ்சரமோடு, எதார்த்தமான நடிப்பால் மகன் மீதான அக்கறையை முகத்தில் கோபமாகக் காட்டும் அப்பாக்களின் உணர்வை நம்பகமான முறையில் கொண்டு வந்திருக்கிறார். தேவதர்ஷினி அம்மா வேடத்தில் வழக்கமான அப்பாவித்தனத்துடன், எல்லையற்ற அன்பைப் பொழியும் தாயாக மனதில் நீண்ட நேரம் தங்குகிறார். இளைஞர்களுக்கு தங்கள் அம்மாவை நினைவூட்டும் அந்தக் காட்சிகள் மிகவும் உணர்ச்சிகரமானவை.

நண்பர்கள் குழு முழுவதும் எல்லையற்ற உற்சாகத்துடன் நடித்திருக்கிறார்கள். அவர்களின் உடல் மொழியும், சரியான டைமிங் வசனங்களும் படத்தை இடைவிடாமல் கலகலப்பாக வைத்திருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் விக்கி, படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி ஒவ்வொரு காட்சியையும் யூத்புல், கலர்புல் நிறமூட்டத்துடன் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்தின் முக்கிய பலம். பாடல்கள் ஆட்டம் போட வைக்க, பின்னணி இசை திரைக்கதையைத் தொய்விலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைக்கிறது. நாஷின் படத்தொகுப்பும், ராமு தங்கராஜின் கலை இயக்கமும் படத்தை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன.

இளைஞர்களுக்கான கதையாக இருந்தாலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையிலான புரிதலையும், செண்டிமெண்ட்டையும் மிக நாகரீகமாகவும், இயல்பாகவும் கையாண்டிருக்கிறார் கென் கருணாஸ். இயக்குநராகவும், நாயகனாகவும் தன் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தாமல், முழு திரைக்கதையையும் முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சம அளவு இடம் அளித்து படத்தை சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.

காதலே வாழ்க்கை என்ற மனநிலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, “படிப்பும் குடும்பமும்தான் உண்மையான அடித்தளம்” என்ற அழகிய செய்தியை, எந்தத் தொய்வும் இல்லாமல், நகைச்சுவையும் உணர்ச்சியும் நிறைந்த கதையாகச் சொல்லியிருக்கிறார் கென் கருணாஸ். நாயகன் மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

‘யூத்’ – இளம் தலைமுறைக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ரசிக்கும் ஒரு இதயத்தைத் தொடும் படம்!

Tags: youth, ken karunas, gv prakashkumar

Share via: