ஹாப்பி ராஜ் - விமர்சனம்
27 Mar 2026
தந்தை-மகன் உறவின் ஆழமான பாசத்தையும், உருவக் கேலியால் ஏற்படும் மனவலியையும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தொனியில் சொல்லும் ஒரு இதயம் தொடும் குடும்ப பொழுதுபோக்கு படம் ‘ஹாப்பி ராஜ்’.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம், சிரிப்பையும் சிந்தனையையும் ஒருசேர பரிமாறும் முழுமையான எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக உருவெடுத்திருக்கிறது.
தன் உருவத்தைப் பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்தாலும், மகன் ஜி.வி.பிரகாஷ் அழகாக வளர்வதையே பெருமையாக நினைக்கும் ஜார்ஜ் மரியன், அவரை அன்போடு பொத்திப் பொத்தி வளர்க்கிறார். ஆனால் தன் தந்தையின் தோற்றத்தால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அவரிடமிருந்து விலகி தன் அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார். பெங்களூரில் வேலைக்குச் செல்லும் அவர் அங்கு நாயகி ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து காதலில் விழுகிறார். பணக்காரரான அவள் தந்தை அப்பாஸ் முதலில் காதலுக்கு ஒப்புதல் தந்தாலும், ஜார்ஜ் மரியனின் எளிமையான தோற்றத்தைக் கண்டு அவரை அவமானப்படுத்துகிறார். உருவத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் அப்பாஸுக்கு ஜார்ஜ் மரியன் சரியான பாடம் புகட்ட, இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. திருமணம் தடைபடுகிறது. தன் தந்தையே காரணம் என நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அதே தந்தையைப் பயன்படுத்தி காதலியின் தந்தையை சமாதானப்படுத்தி திருமணத்தை மீண்டும் நடத்த முயற்சிக்கிறார். அந்த முயற்சி வெற்றியடைகிறதா என்பதை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் சொல்கிறது ‘ஹாப்பி ராஜ்’.
ஜி.வி.பிரகாஷ் தன் சுறுசுறுப்பான நடிப்பால் படம் முழுக்க பார்வையாளர்களை ஹேப்பி மூடில் வைத்திருக்கிறார். குறிப்பாக அப்பாவை நினைத்து கண்ணீர் விடும் உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் கண்கலங்க வைத்துவிடுகிறார். ஜார்ஜ் மரியன் நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து, சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறார். அவரது இயல்பான உடல் மொழியும் வசன உச்சரிப்பும் இதயத்தைத் தொடுகின்றன.
ஸ்ரீ கௌரி பிரியா தனக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான காதலி கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். அப்பாஸ், கீதா கைலாசம், மதுரை முத்து, அதிர்ச்சி மதன் உள்ளிட்ட அனைத்து துணை நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை பாடல்களிலும் பின்னணியிலும் கமர்ஷியல் அம்சங்களை அழகாக இணைத்திருக்கிறது. மதன் கிருஸ்டோபரின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாகவும் பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறது. செல்வா.ஆர்.கே-வின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்துகிறது.
உருவக் கேலியால் பாதிக்கப்படும் மனிதர்களின் மனவலியையும், அதைத் தாண்டி வரும் மகிழ்ச்சியையும் நகைச்சுவைக்குள் அழகாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், “முதல் ஹீரோ அப்பா” என்ற செய்தியை பாடம் போல் அல்லாமல், உணர்வுபூர்வமாகவும் கலகலப்பாகவும் சொல்லி அனைவரும் ரசிக்கும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தைத் தந்திருக்கிறார்.
Tags: happy raj, gv prakashkumar

