நீ பார்எவெர் - விமர்சனம்

28 Mar 2026

காதல் என்றால் பிடிக்காத குடும்பப் பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களும், குடும்ப வாழ்க்கையை நம்பாத இளம் பெண்களும் இன்றைய தலைமுறையில் அதிகம். அப்படிப்பட்ட இரு எதிர்மறை மனநிலைகளை மையமாக வைத்து, போலியான காதலின் வழியே உண்மையான காதலை நோக்கி பயணிக்கும் அழகான காதல் கதையாக வந்திருக்கிறது ‘நீ பார்எவெர்’. இயக்குநர் அசோக்குமார் கலைவாணியின் இந்தப் படம், காதலை மட்டுமல்ல, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் நேர்த்தியாக பேசுகிறது.

காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்கும் லட்சியத்தில் இருக்கும் நாயகன் சுதர்ஷன் கோவிந்த், உண்மையான காதலைப் புரிந்துகொள்ள போலியாக ஒரு பெண்ணை காதலிக்க முடிவு செய்கிறார். அதே நேரத்தில், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்துடன், காதல் கதை எழுதுவதற்காக போலியாக ஒருவரை காதலிக்கத் திட்டமிடும் நாயகி அர்ச்சனா ரவி. இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது தொடங்கும் அவர்களது போலியான காதல் பயணம், இருவரின் எண்ணங்களையும், வாழ்க்கை நோக்கையும் முழுமையாக மாற்றி அமைக்கிறது. இதுவே படத்தின் மையக் கதை.

நாயகன் சுதர்ஷன் கோவிந்த் ஆறடிக்கு மேல் உயரமான தோற்றத்துடன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தாலும், இப்படத்தில் அப்பாவித்தனமான, எளிமையான இளைஞனாக மிக இயல்பாக நடித்திருக்கிறார். காதலுக்கு முன் மற்றும் காதலுக்குப் பின் என அவரது தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் தெளிவான மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். நடிப்பு, நடனம், உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்திலும் சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகி அர்ச்சனா ரவி, நாயகனுக்கு சரியான ஜோடியாகப் பொருந்துகிறார். திரைக்கதையில் முக்கியப் பங்கு வகித்தாலும், அவரது கதாபாத்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தனது பங்கை நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக பிரதோஷ் மற்றும் நோபல், வித்யா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கல் ரவி, எம்.ஜெ.ஸ்ரீராம், ரெதிகா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவத்தால் திரைக்கதையின் ஓட்டத்துக்கு நல்ல ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜியின் கேமரா வேலை படத்தின் முக்கிய பலம். காதலர்களின் உணர்வுகளை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகாகப் படம்பிடித்து பார்வையாளர்களின் மனதில் நேரடியாகக் கொண்டு சென்றிருக்கிறார்.

அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், கமர்ஷியல் தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் இனிமையாக இருக்கின்றன. பின்னணி இசை படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கிறது.

படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகர்ஜுனின் பணி மிகச் சிறப்பு. கதையின் வேகத்தை சரியாகக் கட்டுப்படுத்தி, படத்தை இறுக்கமாக வைத்திருக்கிறார்.

காதல் மீது நாட்டமில்லாத இரு இளைஞர்களின் மனதில் காதல் எப்படி மெல்ல மெல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல முயன்றிருக்கும் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி, திரைக்கதையை எளிமையான மொழியில், அழகான காட்சியமைப்புகளுடன் முன்வைத்திருக்கிறார். குடும்ப உறவுகளின் பின்னணியில் காதலைச் சொன்ன விதம் சுவாரஸ்யமானது. ஆனால், கதையில் புதுமையான திருப்பங்கள் இல்லாதது படத்துக்கு சற்று பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், போலியான காதலின் பின்னால் மெல்ல வெளிப்படும் உண்மையான காதலின் காட்சிகள் படத்துக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளன.

புதுமையான கதை சொல்லல் இல்லாவிட்டாலும், நல்ல நடிப்பு, அழகான ஒளிப்பதிவு மற்றும் உணர்வுபூர்வமான திரைக்கதையால் ‘நீ பார்எவெர்‘ ஒரு இனிமையான காதல் பயணமாக மாறியிருக்கிறது. குடும்பத்துடன் சென்று ரசிக்க ஏற்ற ஒரு லேசான உணர்வுபூர்வமான படம்.

Tags: nee forever

Share via: