திவ்யா - விமர்சனம்

18 Mar 2026

சாதி பாகுபாட்டின் கொடூரத்தை எந்த பிரசாரமும் இல்லாமல், எதார்த்தமான வலியோடு திரையில் கொண்டு வந்து இதயங்களை கணக்கச் செய்யும் ஒரு உண்மைச் சம்பவ அடிப்படையிலான படம் ‘திவ்யா’.

இயக்குநர் ஆர்.ஜே.பி-யின் முதல் முயற்சியே, ஆணவப் படுகொலைகள் இன்னும் தொடரும் இந்தச் சமூகத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது – காதல் வெற்றி பெறுமா ? அல்லது பெற்றோரின் கௌரவம் வெற்றி பெறுமா ?.

ஒரே கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆர்.ஜே.பியும், நாயகி கேத்தியும் காதலில் விழுகிறார்கள். நாயகியின் தந்தைக்கு இந்தக் காதல் விவகாரம் தெரிய வரும்போது, நாயகன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தன் மகளின் படிப்பை நிறுத்திவிட்டு உறவினருக்கு அவசர அவசரமாகத் திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளைத் தொடங்குகிறார். இந்த நெருக்கடியில், நாயகனும் நாயகியும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். நண்பர்களின் உதவியுடன் தப்பி ஓடும் இந்தக் காதல் ஜோடியின் பயணம், இறுதியில் எந்தப் பக்கம் முடியும் என்பதை உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் மனதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பி.

கதை எழுதி இயக்கியதோடு, நாயகனாகவும் நடித்திருக்கும் ஆர்.ஜே.பி, தன் கதாபாத்திரத்துக்கு ஏற்ற அமைதியான மற்றும் இயல்பான நடிப்பால் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். வறுமையான குடும்பப் பின்னணி, கடமைகள் நிறைந்த வாழ்க்கை என்று சிக்கலான சூழலில் காதல் எப்படி ஒரு மனிதனை மாற்றுகிறது என்பதை தன் நுணுக்கமான உணர்ச்சி வெளிப்பாட்டால் அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.

நாயகியாக கேத்தி, அடுத்த வீட்டுப் பெண் போன்ற எளிமையான தோற்றத்துடன், குறைந்த அளவிலான ஆனால் ஆழமான நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். காதல் வெளிப்பட்ட பிறகு அவர் எதிர்கொள்ளும் மனஉளைச்சலும், இறுதியில் அவருக்கு நேரும் அநீதியும் பார்வையாளர்களின் கண்களை கலங்க வைக்கும் வகையில் அருமையாக வந்திருக்கிறது.

நாயகியின் தந்தை வேடத்தில் அனந்த் ராம், அம்மா கதாபாத்திரத்தில் கலாவதி, நாயகனின் தாத்தாவாக பவுன்ராஜ், நண்பர்களாக சபி & ஜிவி, வில்லனாக செந்தில் என அனைத்து புதிய முகங்களும் தங்கள் சிறப்பான நடிப்பால் கதாபாத்திரங்களை மனதில் நிற்க வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார், எளிய மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கதை நடைபெறும் இடங்களும் கதாபாத்திரங்களைப் போலவே உண்மைத் தன்மையுடன் வந்திருக்கின்றன. சங்கர் ராம் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி இருந்தாலும், படத்துக்கு கூடுதல் தாக்கத்தைத் தரும் அளவுக்கு உயரவில்லை. படத்தொகுப்பாளர் வளர்பாண்டி, முன்கூட்டியே யூகிக்கக்கூடிய கதையை “எப்படி நடக்கப் போகிறது” என்கிற சுவாரஸ்யத்துடன் கொஞ்சம் இழுத்துப் போட்டிருக்கிறார்.

சாதி வெற்றி பெறுவது மட்டுமல்ல, பெற்றோரின் மனதை எப்படிக் கல்லாக்குகிறது என்பதை திரை மொழியின் வழியே அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். குடும்ப விவகாரத்தில் பிறர் தலையிட்டால் என்ன நேரும் என்பதை எந்த முழக்கமும் இல்லாமல், கூர்மையாகவும் சுருக்கமாகவும் பதிவு செய்திருக்கும் விதத்துக்காக இயக்குநர் ஆர்.ஜே.பி-க்கு பாராட்டுகள். வீட்டைவிட்டு ஓடும் காதலர்கள் உறவினர்களிடம் சிக்கும் காட்சிகளும், காவல்துறை தலையீட்டுக்குப் பிறகான திருப்பங்கள் இல்லாத சில பகுதிகளும் படத்தை சற்று மெதுவாக நகர்த்தினாலும், சொல்ல வந்த செய்தியை தெளிவாகவும் தாக்கத்துடனும் வழங்கியிருக்கும் படம் இது.

சாதி பிரச்சனையை பிரசாரமாக்காமல், மனித வலியை முன்னிறுத்திய ஒரு நல்ல முயற்சி. பார்த்து முடித்த பிறகு நெஞ்சில் நீண்ட நேரம் இருக்கும் படம்

Tags: divya, rjp

Share via: