கெணத்த காணோம் - விமர்சனம்

14 Mar 2026
தமிழ் சினிமாவில் கிராம வாழ்வியலை மையமாகக் கொண்டு, சமூகப் பிரச்னைகளை நகைச்சுவை கலந்து சொல்லும் படங்கள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வரிசையில், யோகி பாபு நடிப்பில் வெளியாகியுள்ள 'கெணத்த காணோம்' படம், குடிநீர் தட்டுப்பாட்டின் வலியை அடிப்படையாகக் கொண்டு, டைனோசர் எலும்புகள் கிடைக்கும் எதிர்பாராத திருப்பத்துடன் கிராம மக்களின் போராட்டத்தை சுவாரஸ்யமாக சொல்கிறது. மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் இறுதிப் படைப்பான இது, வறட்சியால் தவிக்கும் ஊரொன்றின் நிஜ வாழ்க்கையை உணர்ச்சி மற்றும் சிரிப்பு கலந்து வெளிப்படுத்தி, பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில், குடிநீர் பிரச்னை காரணமாக மக்கள் கொடுமையான துன்பங்களை அனுபவிக்கின்றனர். தங்கள் ஊருக்கு தண்ணீர் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட பின்னர், ஊரில் நீர் ஓட்டம் உள்ள இடம் கண்டுபிடிக்கப்படுகிறது. அது யோகி பாபுவின் (மணிவாசகம்) வீட்டு நிலமாக இருப்பதால், கிராம மக்கள் ஊரின் நலனுக்காக அந்த இடத்தை கேட்கின்றனர். யோகி பாபுவின் தாத்தா, போராட்டமின்றி கிணறு வெட்டினால் இடத்தை தருவதாக ஒப்புக்கொள்கிறார். அதன்படி ஊர் மக்கள் ஒன்றிணைந்து கிணறு தோண்டுகின்றனர். ஆனால், அங்கு தண்ணீருக்கு பதிலாக டைனோசர் எலும்புகள் கிடைக்கின்றன!

இதனால் தொல்லியல் துறை அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆய்வு முகாம் அமைக்கிறது. ஊர் முழுவதும் ஆய்வுகளை விரிவாக்க திட்டமிடும் அவர்கள், கிராம மக்களை வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது. தங்கள் சொந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்ற யோகி பாபு களமிறங்குவதும், அதை நகைச்சுவை நிறைந்த வகையில் எப்படி சாதிக்கிறார் என்பதுமே 'கெணத்த காணோம்' படத்தின் மையக் கதை.

யோகி பாபு, வழக்கமான உடல் கேலி வசனங்களை தவிர்த்து, மக்களை நல்வழிப்படுத்தும், மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் அறிவார்ந்த வசனங்களை பேசி கதாநாயகனாக பிரகாசிக்கிறார். "சொந்த ஊரை விட்டு செல்வது உயிரை விட்டு செல்வதற்கு ஒப்பானது" போன்ற உணர்ச்சிமயமான வசனங்களால் மக்களின் சொந்த மண்ணுக்கான போராட்டத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

கதாநாயகியாக லவ்லின் சந்திரசேகர், சுட்டெரிக்கும் வெயிலிலும் வாடாத மல்லிகை போல தோன்றுகிறார். ஆங்காங்கே தோன்றி சில வசனங்கள் பேசினாலும், திரைக்கதையில் அவரது கதாபாத்திரத்துக்கு பெரிய அளவு இடம் அளிக்கப்படவில்லை.

தொல்லியல் துறை அதிகாரியாக ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.

காமெடி காட்சிகளில் முக்கிய பங்காற்றும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான உச்சரிப்பு மற்றும் நடிப்பால் படம் முழுவதும் சிரிப்பு திரையாக்குகிறார். குறிப்பாக, காவலர்கள் ஊர் மக்களை விசாரணை என்ற பெயரில் அடிக்கும் காட்சிகளில் அவரது டைமிங் வசனங்கள் திரையரங்கை சிரிப்பின் அலையால் நிரப்புகின்றன.

மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் மரியன், யோகி பாபுவின் அக்காவாக நடித்த நடிகை, ஊர் தலைவராக வரும் நடிகர் உள்ளிட்ட அனைவரும் கிராம மக்களின் இயல்பான வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் நடித்து கவனத்தை ஈர்க்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் தியாகராஜனின் கேமரா, புழுதி படிந்த மண்ணையும், தண்ணீர் இல்லாத வறட்சியையும் உண்மைக்கு மிக அருகில் காட்சிப்படுத்தி படத்துக்கு பெரும் வலிமை சேர்த்துள்ளது.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை, பாடல்களும் பின்னணி இசையும் மக்களின் உணர்வுகளை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன.

படத்தொகுப்பாளர் ராமரின் வேலை படத்தின் போக்கை சீராக வைத்திருக்கிறது. கலை இயக்குநர் சுபேனந்தர், "இப்படியும் ஒரு கிராமம் இருக்கிறதா!" என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அழகியல் காட்சிகளை உருவாக்கியுள்ளார்.

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, குடிநீர் தட்டுப்பாட்டின் சோகத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருந்தாலும், மக்கள் மனதில் ஆழமாக பதியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். யோகி பாபுவை முன்னிலைப்படுத்திய போதிலும், பல புதிய முகங்களை இயல்பாக நடிக்க வைத்து, கிராம வாழ்வை நெருக்கமாக கொண்டு வந்துள்ளார்.

தென் மாவட்ட மக்களை வன்முறை, வீரம் நிறைந்தவர்களாக மட்டுமே சித்தரிப்பவர்களுக்கு மத்தியில், அவர்களின் வெள்ளந்தியான குணத்தையும், வலி நிறைந்த வாழ்க்கையையும் நகைச்சுவையாக சொல்லி, ஒரு கிராமத்துக்குள் பயணித்த உணர்வை ரசிகர்களுக்கு தந்திருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில், சமூக பிரச்னையை நகைச்சுவை கலந்து சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு நல்ல கிராம சார்ந்த படைப்பு 'கெணத்த காணோம்'. யோகி பாபுவின் மாறுபட்ட அணுகுமுறையும், கிராம மக்களின் உண்மை வாழ்வும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.

Tags: kenatha kanom, yogi babu

Share via: