கொலைச் சேவல் - விமர்சனம்

14 Mar 2026

தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்சினைகளை துணிச்சலுடன் தொட்டுச் செல்லும் படங்கள் அவ்வப்போது வெளியாகி பார்வையாளர்களை சிந்திக்க வைக்கின்றன. அந்த வரிசையில், கிராமப்புற வாழ்க்கையின் இருண்மையான அம்சங்களை, குறிப்பாக காலம் காலமாக நிகழும் கொடூர சம்பவங்களின் வலியை காதல் பின்னணியுடன் இணைத்து சொல்லும் 'கொலைச்சேவல்', ஒரு உணர்ச்சிமயமான திரை அனுபவத்தை அளிக்கிறது. இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் தொழில்நுட்ப திறமையால் படத்தை ஒரு வலுவான அறிக்கையாக மாற்றியுள்ளார். இது போன்ற படங்கள், சமூக மாற்றத்துக்கான விவாதங்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

நாயகி தீபா பாலு, பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி தான் விரும்பிய நாயகன் கலையரசனை மணந்து கொள்கிறார். வெளியூரில் அமைதியான வாழ்வு வாழ்ந்தவர்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்புகின்றனர். கிராம வழக்கப்படி, காட்டுப் பிரதேசத்தில் உள்ள நிறைசூலி தெய்வத்துக்கு பொங்கல் வைத்து வழிபடுவதால் குழந்தை சுகமாக பிறக்கும் என்பதால், முழு கர்ப்ப காலத்தில் இருக்கும் தீபா பாலு, தன் கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் கோயிலுக்கு செல்கிறார்.

குலதெய்வத்தை வணங்க சென்றாலும், உள்ளத்தில் ஒரு வித அச்சத்துடனும், அமைதியின்மையுடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாராத ஒரு சிக்கலை சந்திக்கிறார். அது என்னவென்று சமூகத்தில் பல காலங்களாக நிகழும், நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர நிகழ்வின் வேதனையாகவும், துயரமாகவும் விவரிப்பதே ‘கொலைச்சேவல்’.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இதற்கு முன்னர் இதுபோன்ற பாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், இதில் தன் உண்மையான நடிப்பு மற்றும் கடின உழைப்பால் எளிய கதைக்கு மிகுந்த வலிமை சேர்த்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை தீபா பாலு, பார்க்கும் போதே ஈர்க்கும் குடும்பத்தன்மை கொண்ட முகத்துடன் தோன்றுகிறார். பாத்திரத்துக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, உண்மையான மற்றும் இதயத்தை பாரமாக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண் கலங்க வைக்கிறார். குறிப்பாக வலுவான காட்சிகளில் ஒரு நடிகையாக அல்லாமல் அந்த பாத்திரமாகவே அடி உதை பெற்று சவாலான காட்சிகளில் அதிகம் முயற்சித்து நடித்திருக்கும் அவரை அதற்காகவே சிறப்பாக பாராட்டலாம்.

நாயகனின் தோழராக நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை நடிகராக அல்லாமல் குணச்சித்திர கலைஞராக நடிப்பில் அடையாளம் பதித்துள்ளார். ஆனால், இறுதி காட்சியில் அவரது தோற்றம் புரண்டு அழுதலைத் தவிர வேறு எதையும் செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.

வசனம் உரைக்காத பாத்திரம் என்றாலும், அந்த வேடத்தின் கொடூரத்தை தன் முகபாவனையிலும், நடிப்பிலும் வெளிப்படுத்தியுள்ளார் கஜராஜ்.

விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை போன்றோர் மண் சார்ந்த மக்களாக பயணித்துள்ளனர்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகையும், மக்களின் கொடூர உள்ளங்களையும் உண்மையாக காட்சியாக்கியுள்ளது. கொலை நிகழ்வை விவரித்த முறை அதீத வன்முறையுடன் இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள துயரம் மற்றும் வேதனையை மக்கள் உள்ளத்தில் பதியும் வகையில் காட்சியமைத்துள்ளார்.

சாந்தன் இசையமைப்பில் பாடல்களும் பின்னணி இசையும் மனித உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் சென்றுள்ளன. அமைதியான சூழலாக இருந்தாலும், வரவிருக்கும் ஆபத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்கும் பழமையான பாடல் மற்றும் பதற்ற சூழலை விவரிக்கும் பின்னணி இசை ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுகின்றன.

காதல், எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்வு மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை, சுருக்கமாக சொன்னாலும், மிக ஈர்க்கும் படமாக நகரச் செய்துள்ளார் எடிட்டர் அஜய் மனோஜ்.

சமூகத்தில் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர செயலை மையப்படுத்தி, அதை உண்மையான முறையில் திரைப்படமாக்கியிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், அதை துயரமும், வேதனையும் நிறைந்ததாக காட்சியாக்கியிருந்தாலும், அதனுள் இருக்கும் காதலை அழகாகவும், உணர்வுமயமாகவும் வழங்கி ரசிக்கச் செய்துள்ளார்.

இவ்வளவு உணர்ச்சிமயமான காதல் ஜோடிக்கு இப்படி ஒரு நிலைமையா!, என்று படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடையும் வகையில், படத்தின் முக்கிய காட்சிகள் உண்மையாக படமாக்கப்பட்டிருந்தாலும், அவை வன்முறையின் உச்சமாக இருப்பது சற்று முகம் சுளிக்க வைக்கிறது.

ஒரு திரைப்படமாக பார்க்கும் போது, தொடக்கத்திலேயே கதை இந்த சிக்கலைப் பற்றி தான் விவாதிக்கப் போகிறது என்பதை பார்வையாளர்கள் எளிதாக ஊகித்து விட முடிகிறது. ஊகிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், பல குறியீடுகளுடன் காட்சிகளை உருவாக்கியுள்ளார். அதில் முதன்மையானது நிறைசூலி தெய்வம்.

இத்தகைய நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன?, இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்ன தண்டனை?, இது போன்ற சமூக சிக்கல்களை வேரறுக்க என்ன செய்ய வேண்டும்?, இப்படி எந்த கேள்வியும் எழுப்பாமல், எந்த தீர்வும் கூறாமல், இது போன்ற கொடூர நிகழ்வால் பாதிக்கப்படுபவர்களின் துயரத்தை மட்டுமே மக்கள் உள்ளத்தில் பதிய வைக்க முயன்றிருக்கும் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன், சிறந்த தயாரிப்பு மூலம் அதை திறமையாக நிறைவேற்றியுள்ளார்.

Tags: kolai seval, kalaiyarasan

Share via: