வௌவல்ஸ் - விமர்சனம்

14 Mar 2026

தமிழ் சினிமாவில் அந்தாலஜி வகை படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் ஐந்து இயக்குநர்கள் இணைந்து ஐந்து வெவ்வேறு குறும்படங்களை உருவாக்கி, அவற்றை ஒரு முழு நீளத் திரைப்படமாக இணைத்து வழங்கியிருப்பது தான் 'வௌவல்ஸ்' (Vowels). இந்த ஐந்து கதைகளுக்கும் பொதுவான ஒரே தொடர்பு காதலை மையப்படுத்திய கருத்து மட்டுமே, அதைத் தவிர வேறு எந்த இணைப்பும் இல்லை. அதேநேரம், இந்தக் கதைகள் அனைத்தும் உயிரோட்டமானவை என்பதால், 'வௌவ்வல்ஸ்' (உயிரெழுத்துக்கள்) என பெயரிடப்பட்டுள்ளது. காதலின் பல்வேறு பரிமாணங்களை சுவாரசியமாக சொல்லும் இந்தப் படம், சிறிய பட்ஜெட் தயாரிப்பாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கிறது.

1. கற்பனையான காட்சியை உண்மையாக்க விரும்பும் அறிவில்லாத காதலால் ஏற்படும் கொடூர கொலை!

2. ஆபத்து நிறைந்த பயணத்தின் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால், தன்னைப் பாதிக்கும் அளவோடு, தன்னுடன் தொடர்புடையவர்களுக்கும் தீங்கு ஏற்படுவதை உணர்தல்!

3. காதல் பிரிவால் உயிரை மாய்க்க முயலும் அறிவற்ற மனிதர்களின் உள்ளங்களை உணர்ச்சிமயமான காதலால் மாற்றி அமைக்கும் முயற்சி!

4. அன்பு காட்டுபவர்கள் மீது சந்தேகம் கொள்ளாமல், எந்தவித சிந்தனையும், தயக்கமும் இல்லாமல் அவர்களுடனும், அவர்களின் காதலுடனும் சேர்ந்து பயணிப்பது!

5. உதடுகள் உரைக்கும் காதல் பொய்யானது, உள்ளத்தில் உள்ள காதலே உண்மையானது என்பதை எண்ணங்களின் பிரதிபிம்பமான கனவுகள் வழியாக உணர்த்தல்?

ஆகிய ஐந்து கதைகள் வழியாக காதலின் வெவ்வேறு உணர்வுகளை பார்வையாளர்களின் இதயத்தில் இறக்கும் முயற்சியே இந்த 'வௌவ்வல்ஸ்' (Vowels).

யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட ஐந்து கதைகளில் பங்கேற்ற அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்கள் பாத்திரங்களுக்கு பொருத்தமாக நடித்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில் யூகி சேதுவின் பாத்திரமும், அவர் உரைக்கும் வசனங்களும் பார்வையாளர்களை மகிழ்வித்து சிரிப்பூட்டுகின்றன. பல படங்களில் கல்லூரி மாணவராக நடித்த சின்னி ஜெயந்த், இங்கு கல்லூரி பேராசிரியராக தோன்றியிருப்பதும், அவரது முதிர்ந்த வயதில் வரும் காதல் மற்றும் திருமண வாழ்வை விவரித்திருக்கும் முறைக்கு சிறப்பு பாராட்டு அளிக்கலாம்.

தொடக்கம் முதல் முடிவு வரை குறிப்பிட்ட கால அளவுக்குள் தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய கருத்துகளை மிக ஈர்க்கும் வகையிலும், தெளிவாகவும் ஐந்து இயக்குநர்களும் வழங்கியுள்ளனர். இருப்பினும், ஐந்தாவது கதை மட்டும் சில இடங்களில், சிலருக்கு பெரிய குழப்பத்தை உருவாக்கி விடுகிறது.

ஒளிப்பதிவாளர்கள் கீர்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி, ஐந்து கதைகளையும் வேறுபடுத்திக் காட்டியதோடு, உயர் தரத்தில் காட்சியாக்கியுள்ளனர். முதல் மற்றும் ஐந்தாவது கதைகளுக்கு பயன்படுத்திய வண்ணங்கள் மற்றும் கோணங்கள் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் உள்ளன. மற்ற கதைகளில் கதாப்பாத்திரங்களின் நடிப்பு மற்றும் வசனங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அருமையாக செய்துள்ளனர்.

சரவண சுப்பிரமணியத்தின் இசை படத்துக்கு மிகுந்த வலிமை சேர்த்துள்ளது. குறிப்பாக ஐந்தாவது கதையில் இடம்பெறும் மேற்கத்திய இசை மற்றும் பாடல் உள்ளத்தை உற்சாகமூட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஹரீஷ் கோம்மே-வின் எடிட்டிங் அனைத்து கதைகளையும் சுவாரசியமாகவும், சுருக்கமாகவும் தொகுத்து முழு படத்தையும் துரிதமாக செல்ல வைத்துள்ளது.

திலீப் குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் என ஐந்து இயக்குநர்களும் ஒவ்வொருவரும் ஒரு கதையை உருவாக்கியிருந்தாலும், அனைவரும் காதலை மையக்கருவாகக் கொண்டு எழுதிய கதை, மற்றும் அதை ஈர்க்கும் வகையில் சொல்ல முயன்ற முறை, முழு படத்தையும் தடங்கலின்றி நகர்த்தினாலும், எந்தக் கதையும் வலுவாக கையாளப்படவில்லை. ஒரு கதை முடிந்தவுடன் அடுத்த கதை தொடங்கும் போது, முந்தைய கதை நம் ஞாபகத்தில் இருந்து முற்றிலும் அழிந்து விடுவது, இந்தப் படத்தின் மிகப்பெரிய குறைபாடு.

ஐந்து கதைகளிலும் விவாதிக்கப்பட்ட செய்தி எளியதாக இருந்தாலும், அதை காதலுடன் இணைத்து ஈர்க்கும் விதத்தில் சொன்ன முறையால் ஐந்து இயக்குநர்களும், தாங்கள் தேர்ந்தெடுத்த கதைகளை சுருக்கமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் வழியாக சொல்லி சற்று மகிழ்வூட்டினாலும், யூகி சேதுவின் கதையைத் தவிர மற்ற கதைகளில் எந்தவித உணர்ச்சி பாதிப்பும் உருவாகவில்லை.

Tags: vowels

Share via: