‘வாரண்ட்’ வெப் சீரிஸ் விமர்சனம்

24 May 2026

காவல்துறையின் உள்ளே மறைந்திருக்கும் இருண்ட உண்மைகளையும், அதன் பின்னணியில் தவிக்கும் மனிதர்களின் வலியையும் துணிச்சலாகப் பதிவு செய்யும் ‘வாரண்ட்’ வெப் சீரிஸ், ஓடிடி தளத்தில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கிறது. ‘விலங்கு’ தொடர் மூலம் போலீஸ் உலகின் ஒரு பரிமாணத்தை யதார்த்தமாகச் சொல்லி பார்வையாளர்களை ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இம்முறை கதையாசிரியர், திரைக்கதையாசிரியர் மற்றும் முன்னணி நடிகராகவும் வெளிப்பட்டு, அதே காவல்துறையின் இன்னொரு முகத்தை நேர்மையுடன் வெளிக்காட்டி வியப்பூட்டியிருக்கிறார்.

குடும்பத்தின் ஒரே மகனான பிரசாந்த் பாண்டியராஜை எப்படியாவது அரசு ஊழியராக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தந்தை, பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார். எதிலும் வெற்றி கிடைக்காத நிலையில், இறுதியில் ஒரு உறவினரின் உதவியால் காவலராக சேர்த்து விடுகிறார். அரசு வேலைக்காக மட்டுமே காவல்துறையில் நுழையும் இந்த இளைஞர், துறையின் கடுமையான அமைப்பைத் தாங்க முடியாமல் திணறுகிறார். அங்குள்ள அதிகார திமிர், ஈகோ உள்ளிட்ட எதிர்மறை அம்சங்களால் பாதிக்கப்பட்டு, சக ஊழியர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அவமானப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் காவல்துறை பணியை விட்டுவிட முடிவு செய்யும் அவர், தன்னை அலட்சியமாகப் பார்த்தவர்களுக்கு தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார். அதற்காக அவர் எடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகள், அவரைப் பெரும் சிக்கலில் மாட்ட வைக்கின்றன. அந்தச் சிக்கல் என்ன? அதிலிருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா? என்பதை, காவல்துறையினர் மீதே இரக்கம் ஏற்படும் வகையில் சொல்கிறது ‘வாரண்ட்’.

காவல்துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற கொடூரமான தாக்குதல்களால் நடைபெறும் சிறை மரணங்களின் பின்னணியில், துறையின் இருண்ட பக்கம் வெளிப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில், சாதாரண மக்களின் மீது இரக்கம் கொண்டு, வலியில் துடிப்பவர்களைப் பார்த்து பதறும் இயல்பான மனிதர்களைக்கூட, காவல்துறையின் அமைப்பு, பணிச்சுமை, ஏமாற்றங்கள் மற்றும் அவமானங்கள் எப்படி நாளடைவில் மாற்றுகின்றன என்பதையும் ஆழமாகப் பேசியிருக்கிறது. மேலும், அதிகார திமிர் கொண்ட சில அதிகாரிகளால் அப்பாவி மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

‘அமுல் பேபி’ என்று அழைக்கும் அளவுக்கு அப்பாவியான முகமும், அமைதியான இயல்பும் கொண்ட வெகுளித்தனமான இளைஞராக பிரசாந்த் பாண்டியராஜ் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். தன் நிலையை மாற்றிக் கொள்ளும் நோக்கில் அவர் எடுக்கும் அதிரடி அவதாரம், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டலைப் பெறுகிறது. சாதாரண மனிதராக இயல்பாக இருந்தவர், தான் யார் என்பதை நிரூபிக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படும் நடிப்பு, ‘கோட்டை கருப்பசாமி’ கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் சேர்க்கிறது.

நாயகிகளாக நர்மிதா எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஆகியோர் பெரிய அளவில் வேலை இல்லாமல் இருந்தாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு தேவையான ஆதரவை அளித்திருக்கிறார்கள். இவர்களில் சாயா தேவியின் பாத்திரமும், அவர் சந்திக்கும் சூழல்களும் குறிப்பிடத்தக்க சுவாரஸ்யத்தைத் தருகின்றன.

பிரசாந்த் பாண்டியராஜின் தந்தையாக பாலாஜி சக்திவேல், அம்மாவாக கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக அருள்தாஸ், காவலராக ஹெலோ கந்தசாமி, கொடைக்கானல் சரவணன் உள்ளிட்ட பாத்திரங்களில் நடித்த அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகப் பொருந்தியிருக்கிறார்கள்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவு, காவல் நிலையத்தின் உள்ளேயும் காவலர்களின் இயல்பான வாழ்வையும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு உண்மையான அனுபவத்தை அளிக்கிறது. சாம் சி.என்-ன் பின்னணி இசை வழக்கத்தை விட சற்று தீவிரமாக இருந்தாலும், திரைக்கதையின் வேகத்தோடு இணைந்து ஒவ்வொரு எபிசோடுக்கும் வலு சேர்க்கிறது.

திரைப்படமாகச் சொல்ல வேண்டிய கதையை பல அத்தியாயங்களாக விரித்து, சுவாரஸ்யமாக நகர்த்திய ஆர்.ராமரின் படத்தொகுப்பு சிறப்பு. குடும்பம், காதல் காட்சிகள் தொடரின் வேகத்தைக் குறைக்கும் இடங்களில் கூட, அவற்றின் மூலம் காவலர்களின் பணிச்சுமை, மன அழுத்தம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்புகளை வெளிப்படுத்தி, பார்வையாளர்களைத் தொடரோடு இணைக்கிறது.

பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன் ஆகியோரின் கதை மற்றும் திரைக்கதை, திரையில் இதுவரை சொல்லப்படாத காவல்துறைப் பணியின் பின்னணியை உறுதியுடன் பதிவு செய்துள்ளன. எவ்வளவு மென்மையான மனம் கொண்டவராக இருந்தாலும், இந்தத் துறை அவர்களை மாற்றிவிடும் என்பதை யதார்த்தத்துடன் சொல்லி, காவலர்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதே சமயம், எளிய மக்களிடம் அதிகாரத்தைக் காட்டும் காவல்துறை, பணம் படைத்தவர்களிடம் மட்டும் அதை ஏன் காட்டுவதில்லை என்பதை கேள்வியாக எழுப்பி, துறைக்கு சரியான குட்டு வைத்துள்ளனர்.

காவல் மரணம் என்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி சுமார் நான்கரை மணி நேரம் முழு கவனத்தையும் ஈர்க்கும் இயக்குநர் விக்னேஷ் நடராஜன், ஒவ்வொரு அத்தியாயத்தையும் உணர்ச்சிபூர்வமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்தியிருக்கிறார். இருப்பினும், கெட்ட வார்த்தைகளின் அதிகப் பயன்பாடு சற்று சிரமமாக இருக்கிறது. ஓடிடி தளங்களுக்கு தணிக்கை இல்லாததால், இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

காவல்துறையை மையப்படுத்திய படங்கள் அல்லது தொடர்கள் பெரும்பாலும் வழக்கமான பாணியிலேயே இருந்த நிலையில், ‘விலங்கு’ மூலம் அதை மாற்றிய பிரசாந்த் பாண்டியராஜ், ‘வாரண்ட்’ மூலம் காவல்துறையில் இன்னும் பல கதைகள் சொல்லப்பட வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

Tags: warrant

Share via: