சட்டென்று மாறுது வானிலை - விமர்சனம்
16 May 2026
இளமை ததும்பும் காதல், திடீர் திருப்பங்கள், அதிர்ச்சி சம்பவங்கள் என கலந்த ஒரு ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியிருக்கிறது ‘சட்டென்று மாறுது வானிலை‘.
இயக்குநர் பாபு விஜய் (ஏ.ஆர். முருகதாஸின் முன்னாள் உதவியாளர்) முதல் படத்திலேயே தொழில்நுட்பம் மற்றும் இணைய உலகின் இருண்ட பக்கத்தை கமர்ஷியல் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார். இளம் ஜோடியின் திடீர் திருமணம் இனிமையாகத் தொடங்கி, சட்டென்று மாறும் வானிலை போல் சிக்கல்களில் சிக்கி, பார்வையாளர்களை இறுதிவரை பயணிக்க வைக்கிறது.
ஐடி ஊழியரான ஜெய், மீனாட்சியை ஒரே பார்வையில் காதலில் விழுந்து, அடுத்த நாளே தன் உணர்வை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார். தேனிலவுக்காக கொடைக்கானல் செல்லும் இந்த ஜோடி, கருடா ராம் நடத்தும் சொகுசு ரிசார்ட்டில் தங்குகிறார்கள். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சனை அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அதே சமயம், மீனாட்சியின் அமைச்சர் தந்தை, மகளை ஜெய்யிடமிருந்து பிரித்து மறுமணம் செய்ய சதி திட்டமிடுகிறார். மகிழ்ச்சியான தொடக்கம் திடீரென உருவெடுத்த சிக்கல்களில் சிக்கி, மீனாட்சி காணாமல் போக, ஜெய் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். இந்த அத்தனை சவால்களையும் ஜெய் தீர்த்து மீண்டும் மனைவியுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக ஜெய், தன் வழக்கமான உற்சாகமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் ரசிகர் என்பதால் சில இடங்களில் அவரது ஸ்டைலை ஒத்துப் போட்டிருந்தாலும், அது சில காட்சிகளில் பலம் சேர்க்கிறது. காதல் காட்சிகளிலும், உணர்ச்சி பொங்கும் தருணங்களிலும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும் நடிப்பிலும் தன்னை நிரூபித்திருக்கிறார். தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என பல்வேறு உணர்வுகளை சரியான அளவில் கையாண்டு பாராட்டுக்குரியவராக மாறியிருக்கிறார்.
ஜெயின் நண்பராக யோகி பாபு வந்திருக்கிறார். வழக்கமான டைமிங் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களால் சிரிக்க வைக்க முயற்சித்தாலும், பெரும்பாலான இடங்களில் அவரது காமெடி பார்வையாளர்களை சென்றடையவில்லை. ஆனால் ஆதித்யா கதிர், ‘கவுண்டமணி – செந்தில்’ ஸ்டைலில் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் சில இடங்களில் நல்ல சிரிப்பை கொடுக்கிறார்.
வில்லன் வேடத்தில் கருடா ராம் உள்பட சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா போன்றோர் தங்கள் பங்குக்கு துல்லியமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் படத்தை வண்ணமயமாக்கி, நாயகன்-நாயகி இருவரையும் அழகாக படமாக்கியிருக்கிறார். கொடைக்கானல் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை துள்ளல் பாடல்களைத் தந்திருக்கிறது. இரைச்சல் இல்லாத பின்னணி இசை காட்சிகளின் வேகத்துக்கு சரியான துணையாக இருக்கிறது.
படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன் கதையை நகர்த்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் தொய்வு தெரிகிறது.
எழுதி இயக்கிய பாபு விஜய், தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகின்றன என்பதை வணிக ரீதியாக சொல்லியிருக்கிறார். இளமை நிறைந்த காதல், திருப்பங்கள், அதிர்ச்சிகள் என அனைத்தையும் இணைத்து படத்தை பார்வையாளர்களுடன் ஒன்ற வைக்க முயன்றிருக்கிறார். கதை சொல்லலில் இன்னும் சற்று கூர்மையும் இறுக்கமும் இருந்திருந்தால் இந்தப் படம் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
‘சட்டென்று மாறுது வானிலை’ என்பது வெறும் காதல் படம் அல்ல… திருமணத்துக்குப் பிறகான சவால்கள், அதிகார சதிகள், தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கம் ஆகியவற்றை கலந்த ஒரு முழுமையான எண்டர்டெய்னர். ஜெய் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!
Tags: sattendru marudhu vaanilai, jai
