எக்ஸாம் - இணையத் தொடர் விமர்சனம்
16 May 2026
தமிழ் சினிமாவில் இயக்குநர் சற்குணம் என்றாலே, நேர்மையான கதை சொல்லும் தன்மைக்கு பெயர் பெற்றவர். அவரது புதிய இணையத் தொடர் 'எக்ஸாம்' அந்த எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றி, பார்வையாளர்களை அதிர்ச்சியிலும் உணர்ச்சியிலும் ஆழ்த்துகிறது.
காவல்துறை டி.எஸ்.பி. அதிதி பாலன் (அதிதி பாலன்) பணி மாறுதலுக்குப் பின் புதிய இடத்துக்கு செல்லும் போது, துஷாரா விஜயனால் கடத்தப்பட்டு அடைக்கப்படுகிறார். அதன் பிறகு, அதிதியின் அடையாளத்தில் துஷாரா டி.எஸ்.பியாக பொறுப்பேற்று, அந்தப் பகுதியில் நடக்கவிருக்கும் பெரிய அரசு தேர்வு மோசடியை அம்பலப்படுத்த முயற்சிக்கிறார்.
ஆனால் உண்மை அதைவிட ஆழமானது. அந்த மோசடிக்கு பின்னால் ஒரு ‘கண்ணுக்கு தெரியாத’ சக்தி இருப்பதும், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலரும் அந்த சக்தியின் பகடைக்காய்களாக மாற்றப்பட்டிருப்பதும் துஷாராவுக்கு புரிகிறது. அந்த மர்ம நபர் யார்? மோசடியின் உண்மையான பின்னணி என்ன? இதுவரை யாரும் திரையில் சொல்லாத உண்மைகளை துணிச்சலுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே ‘எக்ஸாம்’ தொடரின் மையம்.
அரசு வேலைக்காக கனவு காணும் நடுத்தர வர்க்கத்தினரின் உழைப்பை, பணம் படைத்தவர்களும் அதிகார வெறியர்களும் எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை, அரசு தேர்வு மோசடிகள் மூலம் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். இணையத் தொடர்கள் என்றாலே கிரைம்-த்ரில்லர் அல்லது ஹாரர் மட்டும்தான் என்ற கட்டுக்கோப்பை உடைத்து, சமூகப் பிரச்சனையை விறுவிறுப்பான தொடராக மாற்றியிருக்கும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது.
முக்கிய கதாபாத்திரங்களில் துஷாரா விஜயனும் அதிதி பாலனும் தங்கள் சிறந்த நடிப்பால் தொடருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். துஷாராவின் உணர்ச்சி நிறைந்த, அழுத்தமான நடிப்பு, அரசு வேலைக்காக கடுமையாக உழைத்தும் பலன் கிடைக்காமல் போகும் ஏழை-நடுத்தர மாணவர்களின் வலியை அப்படியே பிரதிபலிக்கிறது. அதிதி பாலன், “பணம் இருந்தால் எல்லாம் சாத்தியம்” என்ற மேல்தட்டு மனநிலையை தன் கண்களாலும் உடல்மொழியாலும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களாக நடித்த பல புதுமுகங்களும் தங்கள் பங்குக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக சப்-இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தன் எதார்த்தமான நடிப்பால் முழு திரைக்கதையின் திருப்புமுனையாகவே மாறியிருக்கிறார். ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கிளைமாக்ஸில் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்கிறார்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே தரமானவை. மலைப்பிரதேச பின்னணியில் படமாக்கப்பட்ட காட்சிகள் கண்களுக்கு விருந்து. பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தொடரின் தீவிரத்தை அதிகரிக்கிறது. படத்தொகுப்பும் திரைக்கதையை எந்த இடத்திலும் தொய்வின்றி நகர்த்திச் செல்கிறது.
உண்மையான தமிழ்நாட்டு அரசு தேர்வு மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு, எப்படி இந்த மோசடிகள் நடக்கின்றன, யாரால் நடக்கின்றன என்பதை துணிச்சலாகவும் நுணுக்கமாகவும் காட்டியிருக்கிறார் சற்குணம். முழு தீர்வை சொல்லவில்லை என்றாலும், இந்த மோசடிகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எப்படி சிதைக்கின்றன என்பதை மனதில் ஆழமாக பதிய வைக்கிறார்.
முதல் மூன்று எபிசோடுகள் முழு கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தாலும், அடுத்த எபிசோடுகளில் சற்று தொய்வு இருந்தாலும், இதுவரை திரையில் சொல்லப்படாத மிக முக்கியமான ஒரு சமூகப் பிரச்சனையை எந்த சமரசமும் இன்றி, சுவாரஸ்யமான தொடராக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.
‘எக்ஸாம்’ என்பது வெறும் த்ரில்லர் அல்ல… நடுத்தர வர்க்கத்தின் கனவை திருடும் அமைப்பு ரீதியான மோசடியின் மீதான ஒரு தைரியமான, உண்மைக்கு நெருக்கமான குரல். பார்க்க வேண்டிய தொடர்!
Tags: exam, dushara vijayan, aditi balan
