கருப்பு - விமர்சனம்
15 May 2026
தமிழ் சினிமாவில் மாறுபட்ட படங்களைத் தந்து தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் சூர்யா. ஆனால், அவர் நடித்து கடைசியாக வந்த சுமார் 10 படங்கள் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை, வியாபார ரீதியாகவும் வசூலைப் பெறவில்லை. வருடங்களில் பார்த்தால் 13 வருடங்களாகிவிட்டது.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு, இத்தனை படங்களுக்குப் பிறகு இன்று வெளியாகி உள்ள ‘கருப்பு’ படம் சூர்யாவைக் காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒரு நீதிமன்றத்தையும், நீதிபதியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரு வக்கீல் ஆர்ஜே பாலாஜி. அவரை மீறி அங்கு எதுவுமே நடக்காது. ஏறக்குறைய தனி கட்டப்பஞ்சாயத்து போலத்தான். கேரளாவிலிருந்து மகளின் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து நகைகளைப் பறி கொடுத்த அப்பா ஒருவரின் வழக்கை எடுத்து நடத்துகிறார். அதில் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று பார்க்கிறார். வழக்கின் தாமதத்தால் அந்த மகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போக இறந்து போகிறார். நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் ‘கருப்பு’ சாமியிடம் முறையிடுகிறார் அப்பா. வக்கீலாக உருவம் எடுத்து வருகிறார் கருப்பு சாமி சூர்யா. ஆர்ஜே பாலாஜியின் தனி சாம்ராஜ்யத்தை அவர் அடக்குகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
சாமி படமா, சமூகப் படமா, காமெடி படமா, சென்டிமென்ட் படமா என எந்த ஒரு ஜானரிலும் அடக்க முடியாத திரைக்கதை, காட்சிகள். ஆனாலும் தொய்வில்லாமல் நகர்ந்து நம்மை ரசிக்க வைத்துவிடுகிறது.
படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் சூர்யா வருகிறார். அதுவரையில் ஆர்ஜே பாலாஜிதான் படத்தின் ஹீரோ. இடைவேளைக்குப் பிறகும் அவருக்கான காட்சிகள்தான் அதிகம். இடையில் அவ்வப்போது வந்து போகிறார் சூர்யா. முழு படத்தையும் பார்த்து அவர் எப்படி சம்மத்தித்தார் என்பது ஆச்சரியம்தான்.
ஆர்ஜே பாலாஜி போன்ற வக்கீல்களிடம் மாட்டினால் அவ்வளவுதான் நம் சொத்து முழுவதையும் அழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.
‘கருப்பு சாமி’ கதாபாத்திரத்தில் அதிரடியாக வந்து அசத்துகிறார் சூர்யா. மிரட்டலான நடிப்பு. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை த்ரிஷா. அவரும் வக்கீலாகத்தான் நடித்திருக்கிறார். அவருக்கென சில காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
மலையாள நடிகர் இந்திரன்ஸ், அவரது மகளாக நடித்திருப்பவர் சென்டிமென்ட்டில் கண்கலங்க வைத்துவிடுகிறார்கள். நீதிபதியாக நட்டி, இப்படியும் இருப்பார்களா என கேட்க வைக்கிறார். ஆர்ஜே பாலாஜியுடன் ஒட்டுமொத்தமாக வக்கீல் ஆடை அணிந்து ஒரு கூட்டமே இருக்கிறது. வக்கீல்கள் படத்தை எதிர்த்து வழக்கு தொடுக்காமல் இருந்தால் சரி.
சாய் அபயங்கர் வாசித்துக் கொண்டே இருப்பதுதான் பின்னணி இசை என நினைக்கக் கூடாது. நீதிமன்றம்தான் படத்தின் மையம், மொத்தம். ஆங்காங்கே அமைதியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாடல்கள், குறிப்பாக கருப்பு பற்றிய பாடல் அதிரடி.
‘காந்தாரா’ பார்த்த பிறகு இப்படி ஒரு கதையும், கதாபாத்திரமும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி மனதில் வந்திருக்கலாம். ஏற்கெனவே ‘மூக்குத்தி அம்மன்’ எடுத்த அனுபவம் வேறு இருக்கிறது.
பக்தியும், பரபரப்பும், சென்டிமென்ட்டும் இணைந்து இந்த ‘கருப்பு’ காப்பாற்றியிருக்கிறது.
Tags: karuppu, suriya, trisha, rj balaji
