29 - விமர்சனம்

08 May 2026

காதல் படங்கள் பார்த்து பார்த்து சலிப்பு ஏற்படும் நேரத்தில், காதலை கொண்டாடும் அதே நேரத்தில் அதைத் தாண்டிய உண்மையான வாழ்க்கையை நேர்மையாகச் சொல்லும் ஒரு படம் வந்திருக்கிறது. ‘29’ என்கிற இந்தப் படம், இயக்குநர் ரத்னகுமாரின் கைவண்ணத்தில் எளிமையான காதல் கதையை வெறும் உணர்ச்சி வெள்ளமாக மட்டும் விடாமல், ஆழமான செய்தியோடு கொண்டு செல்கிறது.

29 வயதாகியும் தன் வாழ்க்கைக்கு தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் தடுமாறும் நாயகன் விது, பிரீத்தி அஸ்ரானியின் அழகான காதலால் ‘அந்தப் பெண்ணின் காதலன்’ என்கிற அடையாளத்தைப் பெறுகிறான். அந்தக் காதலும், அந்த அடையாளமும் போதும் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு, காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதற்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கிறது, அதில் சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதை பிரீத்தி புரிய வைக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அது வேலை செய்யாததால், இறுதியில் காதலை முடித்துக்கொள்ள முடிவு செய்கிறாள்.

தான் நினைத்த அடையாளம் கைவிட்டுப் போன பிறகு, மீண்டும் தன் சொந்த அடையாளத்தைத் தேடி பயணிக்கும் விதுவின் வாழ்க்கை என்ன ஆனது? கைவிட்டுச் சென்ற காதலியுடன் அவன் மீண்டும் இணைந்தானா? இல்லையா? என்பதை, காதலை கொண்டாடும் மகிழ்ச்சியோடும், காதலைத் தாண்டிய நிஜ வாழ்க்கையின் கசப்பான உண்மையோடும் சேர்த்து சொல்கிறது ‘29’.

எத்தனை வருஷம் உருகி உருகி காதலித்தாலும், காதல் பயணத்தின் இறுதி சில நிமிட உடல் இச்சை மட்டுமே என்பதை கவித்துவமாகவும், மிக நாகரீகமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். பெண்ணை நிலா, மலர், நட்சத்திரம் என்று அழகாக வர்ணித்தாலும் இறுதியில் அவள் ஒரு பெண் தான். ஆணை சிங்கம், காளை என்று புகழ்ந்தாலும் அவன் ஒரு ஆண் தான். இவர்களுக்கிடையேயான காதல், நிஜ வாழ்க்கையை விட பெரிதல்ல, அதைத் தாண்டி இங்கே செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்பதைச் சொல்லும் விதமும், அதற்கான காட்சிகளை அமைத்த விதமும், காதலர்களை மட்டுமல்ல, காதல் இல்லாதவர்களையும் கைதட்ட வைக்கிறது.

‘ரெட்ரோ’வில் வில்லனாக அச்சுறுத்திய விது, இங்கு நாயகனாகவும், உண்மையான காதலனாகவும் முழுமையாகக் கவர்கிறார். காதல் மட்டுமே தன் அடையாளம் என நம்புவதும், காதலியின் நினைவைத் திரும்பக் கொண்டு வர எடுக்கும் முயற்சிகளும் இளம் பெண்களின் மனதை நிச்சயம் ஈர்க்கும். அடுத்த வீட்டு பையன் மாதிரியான எளிமையான தோற்றம், காதல் உணர்வுகளையும், பிரிவின் வலியையும் அளவான நடிப்பில் நேர்மையாகக் காட்டி, நடிப்பில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் விது. கோலிவுட்டில் அடுத்த கட்ட நாயகனாக அவர் உயர்வார் என நம்பிக்கை தருகிறது.

பிரீத்தி அஸ்ரானி, வட இந்திய அழகு என முகத்தில் தெரிந்தாலும், தன் இயல்பான நடிப்பால் அதை மறைத்து, பார்வையாளர்கள் மனதில் நெருக்கமாக ஒட்டிக்கொள்கிறார். காதலன் கன்னத்தில் அரைந்து காதலை வெளிப்படுத்தும் காட்சியும், ஊருக்குப் போகும் காதலனை வழியனுப்பும் பதட்டமும், அவரது சிறப்பான நடிப்பால் மிக அழகாகக் கடத்தப்பட்டிருக்கிறது.

நாயகனின் நண்பராக வரும் அவினாஸ், காதல் தோல்வியில் புலம்புவதோடு நில்லாமல், இறுக்கமான சூழல்களை லேசாக விலக்கி, பார்வையாளர்களைச் சிரிக்கவும் வைக்கிறார். சிறப்பு தோற்றத்தில் மாஸ்டர் மகேந்திரன், விதுவின் அம்மாவாக ஆதிரா பாண்டியலக்ஷ்மி, பிரீத்தியின் அம்மாவாக சிந்து ஷியாம் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு சரியான தேர்வாக இருந்து, கதைக்கு வலு சேர்க்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, மறந்துபோன கடற்கரை காதலையும், பேருந்து காதலையும் நினைவூட்டுகிறது. காதலர்கள் நடந்த பாதைகளும், பயணித்த இடங்களும் கண்ணுக்கு இனிமையாகத் தெரிகின்றன. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் காதலின் மகிழ்ச்சியையும், வலியையும் எளிதில் மனதில் பதிய வைக்கின்றன. பின்னணி இசையும் மெதுவாகப் பயணித்தாலும் உணர்வைச் சரியாகத் தொடுகிறது.

காதல் மட்டுமே கதை என்றாலும், திரைக்கதையைத் தொய்வில்லாமல் நகர்த்தியிருக்கிறார் எடிட்டர் ஆர்.எஸ். சதீஷ் குமார். காட்சிகளில் காதல் உணர்வை நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார். எளிய மக்களின் காதலை இனிமையாகவும், வலிமையாகவும், எதார்த்தமாகவும் சொல்லி ஏற்கெனவே நிரூபித்த ரத்னகுமார், இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய், “காதல் அழகானது, ஆனால் அதைத் தாண்டி வாழ்க்கை இருக்கிறது” என்கிற அறிவுரையை அழகாகவும், ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார்.

காதலுக்கும் கடற்கரைக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அந்தக் கடற்கரையில் மறைந்திருக்கும் ஒரு அற்புதமான இடத்தை வைத்து, நாயகன் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சியின் மூலம், கடற்கரை காதலுக்கு புதிய பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

எவ்வளவு உருகினாலும் காதல் இறுதியில் உடல் இச்சையில்தான் முடியும் என்கிற கருத்தை தைரியமாகச் சொல்லியிருந்தாலும், அதை மிக நாகரீகமான காட்சி மொழியிலும், கூர்மையான வசனங்களிலும் பதிவு செய்திருக்கிறார் ரத்னகுமார். காதல், ஆண்-பெண் உறவு, எதார்த்த வாழ்க்கை என அனைத்தையும் நேர்மையாகப் பேசி, பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்கிறது ‘29’.

Tags: 29, rathnakumar, vidhu, preethi asrani

Share via: