பிளாஸ்ட் - விமர்சனம்
28 May 2026
கதாநாயகர்களுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவை கதைகளின் பின்னால், பரபரப்பான காட்சிகளின் பின்னால் ஓட வைக்கும் முயற்சி இந்த ‘பிளாஸ்ட்’ மூலம் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது என்று சொல்லலாம்.
மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த ‘த்ரிஷ்யம்’ படத்தைத் தமிழில் கமல்ஹாசன் நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள்.
அந்தப் படத்தின் மையக் கருவை, அப்படியே அதிரடியாக்கி, ஆக்ஷன் வடிவில் மாற்றி யோசித்துள்ள படம் தான் இந்த ‘பிளாஸ்ட்’. அதை பரபரப்பான திரைக்கதை மூலம் போரடிக்காமல் கொண்டு போய் இருக்கிறார் இயக்குனர் சுபாஷ் கே ராஜ்.
கராத்தே மாஸ்டர் ஆன அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயது முதலே தைரியமூட்டி கராத்தே கற்றுக் கொடுத்து “யாருக்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்கணும்,” என்று வளர்க்கிறார். அர்ஜுன் மனைவி அபிராமியும் கராத்தே பயின்றவர். இது ஒருபுறமிருக்க, மலைப் பிரதேசம் ஒன்றில் இருக்கும் 7000 கோடி மதிப்புள்ள கனிம வளத்தை எடுக்க கார்ப்பரேட் முதலாளி ஜான் கொக்கேன் முயற்சிக்கிறார். அதற்காக 1000 கோடி ரூபாயை அமைச்சர் ஒருவருக்கு அளிப்பதற்காக அர்ஜுன் சிதம்பரத்திடம் அந்த வேலையைக் கொடுக்கிறார். ஆனால், ஒரு விபத்தில் அவர் காயமடைந்து போலீஸில் சிக்குகிறார். அங்கிருந்து தப்பித்து காலில் பட்ட குண்டடிக்காக அடியாள் ஒருவரை மருந்து வாங்க அனுப்புகிறார். அந்த அடியாள் ப்ரித்தி முகுந்தனின் செயினைப் பறிக்க முயற்சிக்க, அங்கு ஆரம்பமாகிறது முக்கிய திருப்பம். அதன் பின்ன என்ன நடந்தது என்பதைச் சொன்னால் இன்னும் நீண்டு கொண்டே போகும். அதைப் படத்தில் பார்க்க....
எத்தனை வயதானாலும் அர்ஜுனின் அதிரடி குறையவே குறையாது என்பதை இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். அவர் பேசிய வசனங்களை விட, அவரது கைகளும், கால்களும் ஆக்ஷனில் பேசியதுதான் அதிகமாக இருக்கும்.
அர்ஜுனுக்குச் சிறிதும் குறைவில்லாமல் ப்ரீத்தி முகுந்தனுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு ஆக்ஷன் நாயகி ரெடி. சண்டைக் காட்சிகளில் சர்வ சாதாரணமாய் பிரித்தெடுக்கிறார் ப்ரீத்தி. தமிழ் சினிமா இவரை நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.
வழக்கமான அம்மா கதாபாத்திரம்தான் அபிராமிக்கு என நாம் நினைக்கும் போது இடைவேளையில் ஒரு டுவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். அர்ஜுன் தம்பியாக விவேக் பிரசன்னா, என்ன சும்மா வந்திட்டுப் போறாரே என பார்த்தால் அவருக்கும் முக்கியமான கட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு குடும்பமே சேர்ந்து ஒவ்வொரு வில்லனாக கும்மி எடுக்கிறார்கள். முதலில் ஐவர் வந்து மாட்ட, அடுத்து வில்லன்களில் ஒருவரான சிதம்பரம் வந்து மாட்ட, பின்னர் தேடிப் போய் பவன் மற்றும் முக்கிய வில்லனான ஜான் கொக்கேனை சரியாகச் செய்கிறார்கள் அர்ஜுன் குடும்பத்தினர். பிளாஸ்ட் என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக ‘அர்ஜுன் அண்ட் பேமிலி’ என்று கூடப் பெயர் வைத்திருக்கலாம்.
படத்தில் முக்கியமாக ஸ்டண்ட் இயக்குனர் பீனிக்ஸ் பிரபுவுக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். இனி, அவர் பீனிக்ஸ் பிரபு என்ற பெயரை மாற்றி ‘பிளாஸ்ட் பிரபு’ என்று கூட வைத்துக் கொள்ளலாம். இடைவேளை பைட்டுக்கு மட்டுமே அவருக்கான சம்பளம் சரியாகப் போய்விட்டது. படக் கம்பெனி அவருக்கு இன்னும் டபுள் சம்பளம் போட்டுக் கொடுக்க வேண்டும்.
கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். தேவையில்லாத பாடல்கள் படத்தில் இல்லை. ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர் பிரதீப் ராகவ் ஆகியோரது பணியும் அபாரம்.
இந்த கோடை விடுமுறை முடியும் சமயத்தில் குடும்பத்துடன் சென்று இந்த ‘பிளாஸ்ட்’ஐ பார்த்து ரசிக்கலாம்.
Tags: Blast, Arjun, Preity Mukundhan, Abhirami, Subash K Raj, Ravi Basrur
