காட்டாளன் – விமர்சனம்
29 May 2026
கேரளாவின் அடர்த்தியான வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தல் நடக்கும் உலகத்தை பின்னணியாகக் கொண்டு வந்திருக்கும் ஆக்ஷன் படம் ‘காட்டாளன்’. பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவான இப்படம், KGF, புஷ்பா, விக்ரம் போன்ற படங்களின் தாக்கத்துடன், வனம், பழங்குடியினர் மற்றும் கடத்தல் மாஃபியா ஆகியவற்றை இணைத்து ஒரு பெரிய அளவிலான மோதலை முன்வைக்கிறது.
கடத்தல் மாஃபியா சுனில் கேரள வனப்பகுதியையும் அங்கு வாழும் பழங்குடி மக்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான். யானைகளை வேட்டையாடி தந்தங்களை கடத்தும் அவனின் பேரரசை கைப்பற்ற நினைக்கும் கபீர் துகான் சிங், காவல்துறை உதவியுடன் அவனது தந்தங்களைப் பறித்து அவனுக்கு பெரிய அடி கொடுக்கிறான். தன் இழப்பை ஈடுகட்ட சுனில், நாயகன் ஆண்டனி வர்கீஸை களமிறக்குகிறான். ஆனால் ஆண்டனி பின்னர் சுனிலுக்கு எதிராகத் திரும்பி, பழங்குடி மக்களுக்கு ஆதரவாக நிற்கிறான். இந்த மோதல் இறுதியில் பழங்குடியினருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையேயான மாபெரும் யுத்தமாக உருவெடுக்கிறது.
ஆண்டனி வர்கீஸ் நாயகனாக தன் ஆக்ஷன் காட்சிகளால் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அதிகம் பேசாத, அளவான நடிப்பு மூலம் கடுமையான முகத்தோற்றத்துடன் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். வில்லனாக சுனில் வழக்கம்போல் தன் முரட்டுத்தனமான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். கபீர் துகான் சிங் ஸ்டைலிஷ் வில்லனாக நன்றாக வந்திருக்கிறார். திடீர் என்ட்ரி கொடுக்கும் துஷாரா விஜயன் உடல் தோற்றத்தில் சற்று உறுத்தினாலும், ஆக்ஷன் காட்சிகளில் முழு தீவிரத்துடன் உழைத்திருக்கிறார். பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா உள்ளிட்ட பிற நடிகர்களும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ரெனாடைவின் ஒளிப்பதிவு படத்தின் பலமான பகுதி. ஆக்ஷன் காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் பில்ட்-அப் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அவற்றை பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரவி பஸ்ரூரின் இசை மீண்டும் ரவுடியிசம் நிறைந்த ஆக்ஷன் படங்களுக்கான அவரது டெம்ப்ளேட் பாணியிலேயே இருக்கிறது. சத்தம் அதிகம், புதுமை குறைவு. சமீர் முகமதுவின் படத்தொகுப்பு படத்தை வேகமாக நகர்த்தி, நீளத்தை குறைத்து பார்வையாளர்களை அலுப்பிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.
இருப்பினும், படத்தின் பெரிய பலவீனம் அதன் திரைக்கதை. பவுல் ஜார்ஜ், ஜோபி வர்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் கதை மற்றும் திரைக்கதை ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிறது. யானை தந்தக் கடத்தல் மற்றும் பழங்குடி மக்களின் பிரச்னைகளை ஆழமாகப் பேசாமல், ஸ்லோ மோஷன் நடை, மாஸ் என்ட்ரி, பெரிய யுத்தம் என முந்தைய படங்களின் ஃபார்முலாவை அப்படியே பின்பற்றியிருக்கிறார். இந்த பாணி பார்வையாளர்களுக்கு ஏற்கனவே பலமுறை பார்த்து அலுத்துவிட்ட ஒன்று.
மொத்தத்தில் ‘காட்டாளன்’ என்பது ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு நேரடி, சத்தமான, வேகமான பொழுதுபோக்கு. ஆனால் கதை, ஆழம், புதுமை ஆகியவற்றை எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு அது சற்று பழைய மாதிரியான அனுபவத்தையே கொடுக்கும்.
Tags: kattalan
