வீரன் - விமர்சனம்

03 Jun 2023

ஏஆர்கே சர்வன் இயக்கத்தில், ஆதி, அதிரா ராஜ், சசி, வினய் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

‘மரகத நாணயம்’ படத்திற்குப் பிறகு சர்வன் இயக்கியிருக்கும் படம். சிறுவர், சிறுமியர், குழந்தைகளை மனதில் வைத்து இந்த ‘சூப்பர் ஹீரோ’ கதையை உருவாக்கியிருக்கிறார். கோடை விடுமுறை முடியும் சமயத்தில் வந்த படம் விடுமுறை ஆரம்பமான போது வந்திருக்கலாம்.

பள்ளியில் படித்த போது மின்னல் தாக்கியதால் உடல்நிலை பாதிக்கப்படுகிறார் ஆதி. அதன் பிறகு சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று சில பல வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கே திரும்பி வருகிறார். மின்னல் தாக்கியதால் அவருக்கு சில அபூர்வ சக்திகள் கிடைக்கிறது. அவரது கிராமத்திற்கு ஏதோ ஒரு ஆபத்து என அவரது கனவில் அடிக்கடி வந்ததால்தான் ஊருக்கே திரும்பி வருகிறார். அவரது கிராமத்தில் வர இருக்கும் ஆபத்தையும் கண்டறிந்து அதைத் தடுக்க முயல்கிறார். அதற்கு ஊர் மக்கள் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் காதலி துணையுடனும், நண்பன் துணையுடனும் அதற்காகப் போராடுகிறார். பின்னர் ஊரைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் என்பதால் எப்படி வேண்டுமானாலும் நடித்துவிடலாம். இருந்தாலும் கிராமத்து இளைஞனாக முடிந்தவரையில் யதார்த்தமாய் நடிக்க முயற்சித்திருக்கிறார் ஆதி. அவரது பள்ளிக் காலத் தோழியாக, பின்னர் காதலியாக அதிரா ராஜ், நெருங்கிய நண்பனாக சசி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் மிக யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.

வினய் ராய் தான் முக்கிய வில்லன், இருந்தாலும் அவர் சில காட்சிகளில் தான் வருகிறார். டீக்கடை நடத்துபவராக காளி வெங்கட், அந்த டீக்கடையில் எப்போதும் கதை பேசிக் கொண்டிருப்பவராக முனிஷ்காந்த். இவர்களது கதாபாத்திரங்கள் மையக் கதையுடன் இணையாதல் தனித்து பயணிக்கிறது.

ஆதியின் இசையில் அவருடைய பாடல்கள் வழக்கம் போலவே அமைந்துள்ளன. கிராமத்து நேட்டிவிட்டியை படத்தில் நன்றாகவே பதிவு செய்துள்ளார்கள். அதற்கேற்றபடியான கதாபாத்திரங்களும், அதற்கான கதாபாத்திரத் தேர்வும் அருமை. 

தொடர்ச்சியாக சுவாரசியமான காட்சிகள் இல்லாமல் ஆங்காங்கே கொஞ்சம் டல்லடிப்பது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.
 

Tags: veeran, ark saravanan, hiphop tamizh, athira raj, vinay rai

Share via: