பெல் - விமர்சனம்

08 Jun 2023

வெங்கட் புவன் இயக்கத்தில், ராபர்ட் இசையமைப்பில் குரு சோமசுந்தரம், ஸ்ரீதர், நிதிஷ் வீரா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

மலைப் பிரதேசப் பின்னணியில் ஒரு பரபரப்பான க்ரைம் திரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் ஒரு புதுமையைப் புகுத்தி இருக்கிறார். படத்தின் கண்பார்வையற்ற கதாநாயகன் நடந்தவற்றைச் சொல்ல, அவருடைய கற்பனையில் அவரது கதாபாத்திரத்தில் வேறொருவர் நடிப்பதுதான் அந்தப் புதுமை. வித்தியாசமாக இருந்தாலும் அதுவே படத்தின் குழப்பத்திற்கும், திரைக்கதையை நாம் தொடர்வதற்கு ஒரு சிக்கலாகவும் அமைந்துவிடுகிறது.

ஒரு மலைப் பிரதேசத்தில் சிலர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் கண்பார்வையற்ற ஸ்ரீதரைக் கைது செய்கிறது காவல் துறை. அவரிடம் என்ன நடந்தது எனக் கேட்க, அவர் நடந்தவற்றைக் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்திய முனிவர் பாதுகாக்கப்பட வேண்டிய ஆறு மருத்துவ ரகசியங்களை அவரது ஆறு சீடர்களுக்குச் சொல்லி அதைப் பாதுகாக்கச் சொல்கிறார்கள். அதில் ஒன்று மனித உயிர்களைக் காக்கும் நிசம்ப சூதனி என்ற மூலிகையின் ரகசியம். அதைக் கைப்பற்றி வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்க நினைக்கிறார் குரு சோமசுந்தரம். அந்த நிசம்ப சூதனி பற்றி தெரிந்த ஸ்ரீதரிடம் இருந்து அது பற்றிய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

மூலிகை ரகசியம், அதைக் காப்பாற்றத் துடிக்கும் கதாநாயகன், அதைக் கைப்பற்றத் துடிக்கும் வில்லன், இருவருக்கும் உதவியாக சிலர், மலையில் நடந்த மரணங்களைப் பற்றி விசாரிக்கும் காவல் துறை என இரண்டு மணி நேரப் படத்தைப் பரபரப்பாகவே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் கதையை ஸ்ரீதர் சொல்வது போல பிளாஷ்பேக்கில் திரைக்கதை நகர்ந்தாலும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்கும் நிதிஷ் வீரா தான் படத்தின் கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு அதிகக் காட்சிகளில் வருகிறார். கிளைமாக்சில் மட்டும் ஸ்ரீதருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். நிதிஷ் வீரா இயல்பாக நடித்திருக்க, ஸ்ரீதர் கொஞ்சம் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மருத்துவ ரகசியங்களைக் காக்கும் வைத்தியர் பரம்பரையில் வந்தாலும், அதைக் கண்டுபிடித்து விற்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் குரு சோமசுந்தரம். அவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை, கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார். 

க்ரைம் திரில்லராக மட்டும் நகர்ந்துவிடக் கூடாதென கதாநாயகனுக்கு ஒரு காதலி, அவருடைய நண்பருக்கு ஒரு காதலி என படத்தில் காதலையும் சேர்த்திருக்கிறார்கள். ஷர்மிஷா, துர்கா, ஸ்வேதா டோரதி, ஜோசபின் என நான்கு கதாநாயகிகள். இவர்களில் ஷர்மிஷா கவனம் ஈர்க்கிறார்.

ராபர்ட் பின்னணி இசை, பரணி கண்ணன் ஒளிப்பதிவு குறிப்பிடும்படி உள்ளது.

உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டத்தைக் காட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

Tags: Bell, Nitish Veerah, Sridhar, Guru Somasundaram, Vengat Bhuvan

Share via: