விமானம் - விமர்சனம்

10 Jun 2023

சிவபிரசாத் யனலா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அனசுயா பரத்வாஜ், மாஸ்டர் துருவன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

சமுத்திரக்கனி ஒரு மாற்றுத்திறனாளி, சென்னையின் குடிசைப்பகுதி ஒன்றில் தனது ஒரே மகனுடன் வசிப்பவர். கட்டணக் கழிப்பிடம் ஒன்றை நடத்தி வருபவர். அம்மா இல்லாத மகன் மீது அதிக பாசம் வைத்துள்ளவர். அவரது மகன் துருவனுக்கு விமானம் என்றாலே அவ்வளவு ஆசை. விமானத்தில் எப்படியாவது பயணிக்க வேண்டும் என நினைக்கிறான். இந்நிலையில் அவனுக்கு லுகேமியா நோய் பாதிப்பு வருகிறது. சில காலமே உயிரோடு இருக்கப் போகும் மகனை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறார் சமுத்திரக்கனி. அவரது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு எளிமையான குடிசைப் பகுதியில் நடக்கும் ஒரு கதை. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான பாசத்தை உணர்வுபூர்வமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். 

சமுத்திரக்கனியின் மாற்றுத்திறனாளி கதாபாத்திரமும், அதில் அவரது நடிப்பும் பல இடங்களில் நம்மை கண்கலங்க வைக்கின்றன. அந்தக் கதாபாத்திரத்திற்குண்டான எல்லையில் இயல்பாக நடித்திருக்கிறார். மகனின் நிலையைக் கண்டு துடித்துப் போவதும், அவனுடைய ஆசையை நிறைவேற்ற அலைவதும் ஒரு அப்பாவின் பாசத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

சமுத்திரக்கனியின் மகனாக மாஸ்டர் துருவன். நன்றாகப் படிக்கும் மாணவனாக, விமானம் மீது தீராத காதல் கொண்டவனாக அவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். படத்தின் மொத்த அனுதாபமும் அவர் மீதே விழுகிறது.

அப்பா, மகனின் உருக வைக்கும் பாசக் கதையில், அனசுயா பரத்வாஜின் விலை மாது கதாபாத்திரத்தை எதற்காக வைக்க வேண்டும். ஒரு சிறுவன் சம்பந்தப்பட்ட கதையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தைச் சேர்க்க வேண்டும் என இயக்குனர் நினைத்தது பெரும் தவறு. 

தெலுங்கில்தான் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வு வருவது படத்திற்கான மைனஸ். சில பல காட்சிகளை, சில கதாபாத்திரங்களைத் தவிர்த்திருந்தால் ஒரு உணர்வுபூர்வமான படமாக நிறைவாக அமைந்திருக்கும்.

Tags: vimanam, samuthirakani

Share via: