டக்கர் - விமர்சனம்
10 Jun 2023
கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், சித்தார்த், திவ்யான்ஷா, யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஏழ்மை நிலையில் இருக்கும் சித்தார்த், சென்னைக்குச் சென்று பணக்காரன் ஆக மாற வேண்டும் என ஆசைப்படுகிறார். அடுத்தடுத்து சில வேலைகளைச் செய்து, அதில் பிரச்சினை ஏற்பட்டு வெளியேறுகிறார். தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்து அதிலும் தோல்வி ஏற்படுகிறது. இந்நிலையில் ரவுடி கும்பல் ஒன்றின் காரை அவர் எடுத்துக் கொண்டு செல்லும் சூழல் வருகிறது. அந்த காரின் டிக்கியில் அந்த ரவுடியால் கடத்தப்பட்ட பணக்காரப் பெண்ணான திவ்யான்ஷா இருக்கிறார். சித்தார்த், திவ்யான்ஷா இருவரும் அந்தக் காரில் தொடர்ந்து பயணம் செய்கின்றனர். அவர்களைத் துரத்துகிறது ரவுடி கும்பல். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் சுவாரசியமாக ஆரம்பமாகி நகர்கிறது. சில பல வேலைகளுக்கு சித்தார்த் செல்வதும், அங்கு அவர் அவமானப்படுவதையும் சரியாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். பலருக்கு இது போன்று நிஜவாழ்விலும் நடந்திருக்கும். அவர்களால் சித்தார்த் கதாபாத்திரத்தை ஒன்றி ரசிக்கவும் முடியும். வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவராக சித்தார்த் அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சொல்லப் போனால் மொத்த படத்தையும் அவர்தான் தாங்கிப் பிடிக்கிறார்.
படத்தின் கதாநாயகி திவ்யான்ஷா பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அந்த வாழ்க்கையே வேண்டாமென வெறுப்புடன் இருப்பவர். பணம்தான் வாழ்க்கை என நினைக்கும் சித்தார்த்தும், பணம், வசதி வாழ்க்கை அல்ல என நினைக்கும் திவ்யான்ஷாவும் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் இருக்கிறது, ஆனால், இல்லை என்றே படம் நகர்கிறது. அவர்களுக்கான கிளைமாக்ஸ் காட்சிகள் இருவரது காதலின் ஆழத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
சித்தார்த், திவ்யான்ஷா செல்லும் காரை துரத்துவதுடன் வில்லன் அபிமன்யு சிங்கின் வேலை முடிந்து போகிறது. அவருடனேயே பயணிக்கும் யோகி பாபு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் ‘நிரா நிரா’ படம் திரும்பத் திரும்ப கேட்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனுக்கு சவாலான வேலையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கார் பயணக் கதையை நாமும் சேர்ந்து பயணிக்கும் விதமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் திரைக்கதை ஏதாவது ஒரு விஷயத்தை மையப்படுத்தி மட்டும் சென்றிருக்கலாம். அவ்வப்போது அது கார் பயணிப்பது போல மாறி மாறிப் பயணிப்பது தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
Tags: takkar, karthik g kirish, siddharth, niwas k prasanna