போர் தொழில் - விமர்சனம்

10 Jun 2023

விக்னேஷ் ராஜா இயக்கத்தில், அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வந்துள்ள ஒரு பரபரப்பான த்ரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் ராஜா ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த பரபரப்பு எந்த விதத்திலும் குறையாத அளவில் திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

2010ல் நடக்கும் கதை. திருச்சியில் தொடர்ந்து சில இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்றாக க்ரைம் பிராஞ்ச் அதிகாரிகளான சரத்குமார், அசோக் செல்வன் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விசாரிக்க ஆரம்பித்த பிறகும் சில கொலைகள் நடக்கிறது. கொலையாளியை நெருங்கிய சமயத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் நடக்கிறது. அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சரத்குமார் அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி, அசோக் செல்வன் புதிதாக வேலைக்குச் சேர்ந்த அதிகாரி. அனுபவத்தின் மூலம் விசாரணையை ஆரம்பிக்கிறார் சரத்குமார். தான் படித்த புத்தக அனுபவம் மூலம் விசாரிப்பது சிறந்தது என்கிறார் அசோக் செல்வன். கடுகடுப்பான அதிகாரியான சரத்குமாரும், பயந்த அதிகாரியான அசோக் செல்வனும் எப்படி ஒன்றாக இணைந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பது இரட்டைப் பாதையாகச் சென்று ஒரே பாதையாகிறது. இருவரது நடிப்பும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. சில காட்சிகள் ஹாலிவுட் படத்தைப் பார்ப்பது போன்று இருப்பதும் சிறப்பு.

நிகிலா விமலுக்கு அதிக வேலையில்லை என்றாலும் வரும் சில காட்சிகளிலும் நாயகன் அசோக் செல்வனுக்கு சரியான ஆலோசனை சொல்கிறார்.

ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை, கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சரங் படத் தொகுப்பு, 2010ஐ கண்முன் கொண்டு வந்துள்ள கலை இயக்குனர் இந்துலால் கவீத் படத்திற்குப் பக்கலமாக அமைந்துள்ளது.

கொலைகளுக்கான காரணம் ‘சைக்கோ’ கதாபாத்திரங்கள் என்பது மட்டும் வழக்கமான ‘டெம்ப்ளேட்’ ஆக இருக்கிறது. அதில் ஒரு சரியான காரணத்தை  வைத்திருந்தால் இன்னும் மாறுபட்ட படமாக இருந்திருக்கும்.

Tags: por thozhi, ashok selvan, sarathkumar, vignesh raja

Share via: