எறும்பு - விமர்சனம்
17 Jun 2023
சுரேஷ் ஜி இயக்கத்தில், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சார்லி, சூசன் ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஒரு சிறுமிக்கும் அவளது தம்பிக்கும் இடையிலான பாசப்பிணைப்புதான் இந்தப் படம். தாயை இழந்த காரணத்தால் தன் தம்பியை ஒரு அம்மா போல அரவணைக்கும் ஒரு சிறுமியின் கதையை உணர்ச்சிபூர்வமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
சார்லி ஒரு ஏழை விவாசயக் கூலி. மறைந்த முதல் மனைவியின் குழந்தைகளாக மோனிகா சிவா, சக்தி ரித்விக். இரண்டாம் மனைவி சூசன், ஒரு குழந்தை என இருப்பவருக்கு 30 ஆயிரம் ரூபாய் கடன். அதை கொடுத்த எம்எஸ் பாஸ்கர் கேவலமாகப் பேச, எப்படியாவது கடனை அடைக்க முயற்சிக்கிறார். கரும்பு வெட்ட, மனைவியுடன் வெளியூர் செல்கிறார். அந்த சமயத்தில் சக்தி ரித்விக் அவனது சித்தி குழந்தையின் மோதிரத்தை போட ஆசைப்பட்டு அதைத் தொலைத்துவிடுகிறான். அது பற்றி தெரிந்த மோனிகா சிவா, சித்தி திரும்பி வருவதற்குள் அது போல வேறொரு மோதிரம் செய்து சமாளிக்க எண்ணுகிறார். அதற்காகப் பணம் சேர்க்க பல வேலைகளைச் செய்கிறார். மோதிரம் வாங்கும் அளவிற்கு பணம் சேர்ந்ததா, சித்தியிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோனிகா சிவா, முத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ள சக்தி ரித்விக் ஆகிய இருவரும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு இயல்பாய் நடித்து பாராட்டைப் பெறுகிறார்கள். ஏழை விவசாயின் வலியை தன் கதாபாத்திரம் மூலம் கடத்துகிறார் சார்லி. கொடுமைக்கார சினிமா சித்திகளின் வரிசையில் சூசன். வட்டிக்குப் பணம் கொடுப்பவராக எம்எஸ் பாஸ்கர். மோனிகா, சக்திக்கு உதவும் அப்பாவி மனிதராக மரியம் ஜார்ஜ். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மண் மணம் மாறாமல் உருவாக்கி அதற்குத் தகுந்த நடிகர்களை நடிக்க வைத்து மனதில் இடம் பிடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.
அருண்ராஜ் பின்னணி இசை, காளிதாஸ் ஒளிப்பதிவு இயக்குனரின் எண்ணங்களை மேலும் சிறப்பாக்கியிருக்கிறது.
ஒரு எளிமையான, இனிமையான, உணர்வுவூர்மான ஒரு படம் இந்த ‘எறும்பு’.
Tags: erumbu, charlie, monica siva, shakthi rithvik, suresh g