பொம்மை - விமர்சனம்
18 Jun 2023
ராதாமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
ஒரு பொம்மையைக் காதலிக்கும் கதாநாயகனைப் பற்றிய கதை. உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நினைத்து படமெடுத்து ரசிகர்களையும் ஏமாற்றி, அவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறு வயதில் தோழி ஒருவரைப் பிரிந்ததால் மனதளவில் பாதிக்கப்பட்டவர் எஸ்ஜே சூர்யா. ஒரு பொம்மை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரது கம்பெனிக்கு வந்த ஒரு பொம்மை சிறு வயதில் பிரிந்த அவரது தோழியை ஞாபகப்படுத்துகிறது. அந்த பொம்மையை அழகாக வடிவமைத்து, அதைத் தன் பழைய தோழியாக, காதலியாக உணர்கிறார். அந்த பொம்மையை கம்பெனியிலிருந்து விற்றதற்காக சூபர்வைசரைக் கொலை செய்கிறார். சூர்யாவின் பொம்மை காதல் என்ன ஆனது, கொலை விசாரணையில் சூர்யா சிக்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தனது முந்தைய படங்களில் அழகான கதை, உணர்வுபூர்வமான காட்சிகள், அழுத்தமான கதாபாத்திரங்கள் என நம்மைக் கவர்ந்த இயக்குனர் ராதா மோகன், இந்தப் படத்தில் அப்படி எதையும் வைக்காமல் விட்டது ஆச்சரியமாக உள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா மீட்டருக்கும் மேலேயே அதிகமாக நடித்திருக்கிறார். ‘ஸ்பைடர், நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் அவர் ஏற்கெனவே நடித்துவிட்டதால் இதில் புதிதாக எதுவும் தெரியவில்லை. பார்க்க பொம்மை போலவே இருந்தாலும், நடிப்பில் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட முயன்று தோற்றுப் போயிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் மிகச் சுமாரான பாடல்கள் இருந்தாலும் பின்னணி இசையில் முடிந்தவரையில் காட்சிகளைத் தேற்றியிருக்கிறார்.
‘பொம்மை’ காதல் என்றால் புதிதாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரே கடையில் பெரும்பான்மையான படத்தை முடித்து ‘நாடகம்’ ஆக்கிவிட்டார்கள்.
Tags: bommai, radhamohan, yuvanshankar raja, sj surya, priya bhavani sankar