பானி பூரி - விமர்சனம்
21 Jun 2023
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், லிங்கா, சம்பிகா, குமரவேல், கனிகா, சுஹாசினி குமரன் மற்றும் பலர் நடித்திருக்கும் வெப் தொடர் இது.
வெப் தொடர்கள் என்றாலே க்ரைம் கதைகள் அல்லது பேய்க் கதைகள் என வந்து கொண்டிருக்கும் போது ஒரு ‘மெச்சூர்டான’ காதல் கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
லிங்கா, சம்பிகா இருவரும் காதலர்கள். நான்கைந்து வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் சம்பிகாவின் தோழியான சுஹாசினி அவரது காதல் கணவரைப் பிரிந்து சம்பிகாவின் வீட்டிற்கு வருகிறார். காதலிக்கும் போது இருக்கும் அன்பு கல்யாணத்திற்குப் பிறகு இல்லை என சுஹாசினி சொல்வதைக் கேட்டு சம்பிகா குழம்பிப் போகிறார். அதனால், தனது காதலரான லிங்காவை விட்டுப் பிரிய முடிவெடுக்கிறார். இதனிடையே, சம்பிகா வீட்டிற்கு வந்து அவரது அப்பா இளங்கோ குமரவேலிடம் சம்பிகாவைப் பெண் கேட்கிறார் லிங்கா. இருவரும் சேர்ந்து ஒரு வாரம் ஒன்றாக இருங்கள், அதன்பின் திருமணம் செய்வதா வேண்டாமா என முடிவெடுங்கள் என்று சொல்கிறார். அதன்படி லிங்கா, சம்பிகா தங்களது ஒரு வார ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள். அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
சில படங்களில், வெப் தொடர்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த லிங்கா, இந்தப் படத்தில் தனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தக் காலத்து இளைஞர்கள் எப்படி இருப்பார்கள், எப்படி காதலிப்பார்கள், காதலுக்காக என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை லிங்கா இயல்பாகச் செய்து பாராட்டைப் பெறுகிறார்.
விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாதுரை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சம்பிகா. இந்தத் தொடரில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்திருக்கிறார். தோழி சொன்னதால் வந்த குழப்பத்தை அடுத்து தன் காதலையே வேண்டாமென நினைக்கும் ஒரு கதாபாத்திரம். அதன்பின் காதலனுடன் ஒரு வாரம் ஒன்றாக வாழ வேண்டிய சூழலில் அதற்கேற்றபடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சம்பிகாவின் அப்பா இளங்கோ குமரவேல் வழக்கம் போல மிக யதார்த்தமான நடிப்புடன் கவர்கிறார். சம்பிகாவின் தோழியாக சுஹாசினி குமரன், லிங்காவின் நண்பராக வினோத் சாகர், லிங்காவின் அண்ணனாக ஸ்ரீகிருஷ்ண தயாள், அண்ணியாக கனகா என மற்ற கதாபாத்திரத் தேர்வும், அதில் அவர்களது நடிப்பும் ரசிக்க வைத்துள்ளது.
நவ்நீத் சுந்தரின் பின்னணி இசை, பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு வலதுகரங்களாய் இருக்கிறது.
ஒரு வெப்தொடருக்குரிய மெதுவான திரைக்கதை, சில காட்சிகளில் இருக்கும் நாடகத்தனத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
காதலைப் பற்றிய புரிதல் இல்லாமல், காதலர்களுக்குள் இருக்கும் சில சிக்கல்களை, வாழ்க்கை முறையை அவர்களும் உணர்ந்து கொள்ளும் விதத்தில் ஒரு உணர்வு பூர்வமான தொடரைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
Tags: paani poori, balaji venugopal, linga, champika