அஸ்வின்ஸ் – விமர்சனம்
21 Jun 2023
தருண் தேஜா இயக்கத்தில், வசந்த் ரவி, விமலா ராமன், சிம்ரன் பரேக், சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
திகிலான பேய்க் கதைகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ வந்திருக்கின்றன. அந்த வரிசையில் வந்துள்ள படம்தான் இதுவும், ஆனால், தொழில்நுட்ப விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி ஒரு தரமான திகில் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண். இப்படியான திகில் படங்களில், ‘ஒளியும், ஒலியும்’ மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற அவரது தனி கவனம் படம் முழுவதும் தெரிகிறது.
‘பிளாக் டூரிசம்’ என்பது தற்போதைய யு டியூப் காலத்தில் மிகவும் பிரபமாக இருக்கும் ஒன்று. இது ‘டார்க் டூரிசம்’ என்றும் சொல்லப்படுகிறது. அமானுஷ்ய இடங்கள், மர்மமான மரணங்கள் நடந்த இடங்கள், யாரும் செல்லத் தயங்கும் இடங்களுக்கு செல்லுதல் ஆகியவற்றைத்தான் ‘பிளாக் டூரிசம்’ என்றழைக்கிறார்கள். யு டியுபில் இது போன்ற பல வீடியோக்கள் உள்ளன.
அப்படி பிளாக் டூரிசத்தை மையமாக வைத்து யு டியுப் சேனல் ஒன்றை நடத்தும் வசந்த் ரவி மற்றும் அவரது குழுவினர் லண்டனில், ஒரு தீவில் உள்ள பிரம்மாண்டமான மேன்ஷனுக்குச் செல்கிறார்கள். அந்த இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான விமலா ராமன் மற்றும் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் விமலா ராமன் உடல் மட்டும் கிடைக்கவில்லை என்பதும் மர்மமாக இருக்கிறது. வசந்த் ரவி குழுவினர் அந்த மேன்ஷனுக்குள் சென்று வீடியோ எடுக்க ஆரம்பிக்கிறார்கள். அங்கு அவருக்கும் அவரது குழுவினருக்கும் அடுத்தடுத்து மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. அவை என்ன, அவர்கள் உயிருடன் தப்பித்து வெளியில் வந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக அஸ்வினி குமாரர்கள் என்ற ஒரு கதையைச் சொல்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அந்தக் கதையும் தற்போது லண்டனில் அந்த மேன்ஷனுக்குள் சென்ற வசந்த் ரவி குழுவுக்கும் நடக்கும் கதையையும் படத்தில் தொடர்புப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
கடலுக்கு நடுவே தனியாக மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் அந்த மேன்ஷனை சாதாரணமாகப் பார்ப்பதற்கே ஒருவித பயம் வருகிறது. அந்த மேன்ஷனுக்குள் உள்ள ஒவ்வொரு இடத்தையும் த்ரில் கலந்த விதத்தில் பலவித கோணங்களில் ஒளிப்பதிவு செய்துள்ள எட்வின் சாகே, படத்தொகுப்பு செய்துள்ள வெங்கட் ராஜன், ஒலி வடிவமைப்பு செய்துள்ள சச்சின் சுதாரகரன், ஹரிஹரன், ஒலிக்கலவை செய்துள்ள ஹரிஷ், இசையமைத்துள்ள விஜய் சித்தார்த் ஆகியோரை முதலில் பாராட்டியே ஆக வேண்டும். இவர்களது ஈடுபாட்டான ஒத்துழைப்புதான் இந்தப் படத்தை மேலும் ரசிக்க வைக்கிறது.
மேன்ஷனுக்குள் வசந்த் ரவி, அவரது குழுவைச் சேர்ந்த சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயபிரதீப் ஆகியோர் சென்ற அந்த ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசியில் கிளைமாக்ஸ் வரை அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்புடன் திரைக்கதை நகர்கிறது. வசந்த் ரவியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் அவர் பயப்படுவதை விட நம்மை அதிகம் பயப்பட வைக்கிறது. அவரது குழுவில் ஒவ்வொருமே அவர்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு பயப்படுகிறார்களோ அதே அளவு பயத்தை நமக்கும் கடத்துகிறார்கள்.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் நீளமான காட்சிகளாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதன்பிறகு ‘அஸ்வின் குமாரர்கள்’ கதை, ‘ராட்சசன்’ கதை, விமராமனின் பிளாஷ்பேக், இரண்டு சிலைகள் என சில பல திருப்பங்களை சுவாரசியமாவும், பரபரப்பாகவும் கொடுத்து திகிலடைய வைக்கிறார்கள்.
படத்தின் தரத்தில் ஒரு ஹாலிவுட் படத்தின் மேக்கிங் இருக்க வேண்டும் என படக்குழு உழைத்துள்ளது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஒரு பேய்ப் படத்தை இதுவரை நாம் பார்க்காத தரத்துடன் கொடுத்தற்கு தனி பாராட்டுக்கள்.
Tags: asvins review, asvins, vasanth ravi, vimala raman