ரெஜினா - விமர்சனம்
24 Jun 2023
டொமின் டிசில்வா இயக்கத்தில், சதீஷ் நாயர் இசையமைப்பில், சுனைனா, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
பழி வாங்கும் கதைகள் நிறைய வந்தாலும் படத்தின் கதாநாயகி பழி வாங்கும் கதை என்பது தனித்துவமானது. இந்தப் படத்தில் சில பல எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து நம்மைக் கவர முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.
எந்த ஆதரவில்லாமல் இருக்கும் சுனைனாவுக்கு அவரது காதல் கணவர் அனந்த் நாக் வாழ்க்கையில் வந்த பிறகுதான் நிம்மதி கிடைக்கிறது. இந்த சூழ்நிலையில் வங்கியில் வேலை பார்க்கும் அனந்த் நாக்கை ஒரு கொள்ளைக் கூட்டம் கொன்று விடுகிறது. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடக்கிறார் சுனைனா. ஆனால், எந்த விசாரணையும் நடக்கவில்லை. எனவே, அவரே கொலையாளிகளைக் கண்டுபிடித்து பழி வாங்கும் முயற்சியில் இறங்குகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஆரம்பத்தில் சென்டிமென்ட் காட்சிகளுடன் நகரும் படம், போகப் போக பரபரப்பான காட்சிகளுடன் நகர்கிறது. கொலையாளிகளைக் கண்டுபிடிக்க எந்த ஒரு எல்லைக்கும் செல்கிறார். ஒரு கொலையாளியின் மனைவியான ரித்து மந்த்ராவுடன் நெருங்கிப் பழகும் அளவிற்கு அவர் செல்வது கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால், அந்தக் காட்சிகளை மிகவும் நெருக்கமாகக் காட்டாமல் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். ரித்துவின் கணவரான நிவாஸ் ஆதித்தனை வைத்தே மற்ற கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் யுத்தி ரசிக்க வைக்கிறது.
நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா இருவரது கதாபாத்திரங்களும் முக்கியமான கதாபாத்திரங்கள். இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள். ரித்துவின் கதாபாத்திரம் கொஞ்சம் ‘ஷாக்’ ஆன கதாபாத்திரம். சிகரெட் பிடிப்பது, குடிப்பது என நடித்து அதிர்ச்சியூட்டுகிறார். ஒரே ஒரு நீளமான காட்சியில் சாய் தீனா நடித்திருக்கிறார். சுனைனாவுக்கு உதவி செய்யும் கதாபாத்திரங்களில் பவா செல்லதுரை குறிப்பிட வைக்கிறார்.
சதீஷ் நாயரின் பின்னணி இசை, பவி கே பவன் ஒளிப்பதிவு த்ரில்லர் படங்களுக்குரிய பங்களிப்பைக் கொடுத்திருக்கிறது.
சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்கும்.
Tags: regina, sunaina, Domin D Silva