நாயாடி – விமர்சனம்
24 Jun 2023
ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில், அருண் இசையமைப்பில், ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, ஃபபி, நிவாஸ், அரவிந்த்சாமி, ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
யு டியூபில் பேய்கள் பற்றிய வீடியோக்களைப் பற்றி பதிவிட்டு சேனல் நடத்தி வருபவர்கள் ஆதர்ஷ், காதம்பரி, ஃபபி, நிவாஸ், அரவிந்த்சாமி. காட்டிற்கு நடுவே பழைய வீடு ஒன்றை வாங்கிய ஒருவர், அந்த வீட்டில் பேய் இருப்பதாக சந்தேகப்பட்டு அதைப் பற்றிய வீடியோ எடுத்து தருமாறு அவர்களிடம் கேட்கிறார். அதற்காக பணம் தருவதாக அவர் கூறு அதனால் நண்பர்கள் சம்மதிக்கிறார்கள். அந்த காட்டிற்குச் செல்கிறார்கள். ஆனால், திரும்ப வர முடியாமல் தவிக்கிறார்கள். அது மட்டுமல்ல ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். அதற்கான காரணம் என்ன, அவர்கள் அதிலிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஆதர்ஷ் மதிகாந்தம். படத்தில் அவருடைய நண்பர்களாக நடித்திருப்பவர்களும் புதுமுகங்கள் என்பதால் யாரையுமே நடிகர், நடிகைகளாகப் பார்க்க முடியவில்லை. அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே தெரிகிறார்கள். முடிந்தவரையில் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். வெறும் பேய் எனக் காட்டினால் கொஞ்சம் போரடித்துவிடும் என நினைத்து தனக்கும், காதம்பரிக்கும் இடையில் காதல் என காதலையும் சேர்த்திருக்கிறார் ஆதர்ஷ்.
படம் முழுவதும் காட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைக் கொடுக்க இயக்குனர் ஆதர்ஷ் முயற்சித்திருக்கலாம். சில காட்சிகள் யு டியுபில் பார்ப்பது போன்ற உணர்வையே தருகிறது.
ஒளிப்பதிவாளருக்கும், பின்னணி இசையமைப்பாளருக்கும்தான் இம்மாதிரியான பேய்க் கதைகளில் வேலை அதிகமிருக்கும். இருவருமே பயத்தைக் கூட்ட இயக்குனருக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில் ‘நாயாடி’ யார் என்பது பற்றிய கதையை நீளமாகச் சொல்லியிருந்தாலும் அந்தக் கதை சித்திரக் காட்சிகளாக அமைந்து ரசிக்க வைக்கிறது.
Tags: naayadi, Aadharsh Madhikaandham, Kadhambari, Fabby