அழகிய கண்ணே – விமர்சனம்
24 Jun 2023
விஜயகுமார் இயக்கத்தில், என்ஆர் ரகுநந்தன் இசையமைப்பில், லியோ சிவகுமார், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
சாதி மாறிய திருமணங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நிறைய கதைகள் வந்துள்ளன. இந்தப் படத்தில் பிராமண வீட்டுப் பெண்ணைக் காதலிக்கும் வேறொரு சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் காதலித்து மணந்ததால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அறிமுக நாயகன் லியோ சிவகுமார், கிராமத்தில் நாடகம் நடத்துவதில் முழு ஆர்வம் உள்ளவர். எப்படியாவது சினிமாவிற்குச் சென்று இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அவரைப் பார்த்து எதிர் வீட்டு பிராமணப் பெண்ணான சஞ்சிதா ஷெட்டிக்குக் காதல் வருகிறது. தனது வீட்டு எதிர்ப்பை மீறி லியோ சிவகுமாரைத் திருமணம் செய்து கொள்கிறார் சஞ்சிதா. லியோ இயக்குனர் பிரபு சாலமனிடம் வேலை பார்த்து தனியாக படம் இயக்க வாய்ப்பு தேடி அலைகிறார். சஞ்சிதா ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். குழந்தை பிறந்த பிறகும் சஞ்சிதாவின் முறை மாமன் ஒருவர் அவரைப் பழி வாங்க நினைக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
ஒரே படத்திலேயே சில பல கதைகளைச் சேர்த்துத் தடுமாறியிருக்கிறார் இயக்குனர் விஜயகுமார். ஒன்று லியோ, சஞ்சிதா இருவரது காதலைப் பற்றி மட்டும் காட்டியிருக்க வேண்டும். அல்லது லியோவின் சினிமா வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றிக் காட்டியிருக்க வேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது எனத் தெரியாமல் இங்கு கொஞ்சம் காட்சிகள், அங்கு கொஞ்சம் காட்சிகள் எனப் படம் நகர்கிறது. இயக்குனராக ஆகத் துடிக்கும் ஒருவரது வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை மட்டும் உணர்வுபூர்வமாகக் கொடுத்திருக்கிறார்.
அறிமுக நாயகன் லியோ சிவகுமார் முதல் படமாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சில காட்சிகளில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் கோபமான காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் பாஸ் மார்க் வாங்கித் தேறிவிடுகிறார். சஞ்சிதா அழகான காதலியாக அன்பான மனைவியாக, பாசமான அம்மாவாக மனதில் இடம் பிடிக்கிறார். கிளைமாக்ஸ் நடிப்பில் கண் கலங்க வைக்கிறார்.
இயக்குனர் பிரபு சாலமன், விஜய் சேதுபதி ஆகியோரும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். கிராமம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சஞ்சிதா குடும்பத்தினர், லியோ குடும்பத்தினர்களாக நடித்திருப்பவர்கள் யதார்த்தமான தேர்வு.
என்ஆர் ரகுந்தன் பின்னணி இசையில் உயிரூட்டியிருக்கிறார். பாடல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
தலைப்பை அழகாய் யோசித்த இயக்குனர் திரைக்கதைக்காக இன்னும் யோசித்திருக்கலாம்.
Tags: azhagiya kannae, leo sivakumar, sanchitha shetty, vijayakumar