தண்டட்டி – விமர்சனம்

24 Jun 2023

ராம் சங்கையா இயக்கத்தில், பசுபதி, ரோகினி, முகேஷ், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

‘தண்டட்டி’ என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக….வயதான பெண்கள் காதில் அணியும் ஒரு காதணி அது. 

ஒரு சில அறிமுக இயக்குனர்கள் கிராமத்து மண் வாசனையுடன் அவர்களது படங்களைக் கொடுக்க நினைப்பதற்கு கோடான கோடி நன்றிகள். நமது வாழ்க்கையின் அரிச்சுவடியே கிராமங்களில்தான் உள்ளது. அப்படியான கிராமத்துக் கதைக் களங்களை, கிராமத்து மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடியே காட்டும் இயக்குனர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்கள். அப்படி ஒரு பாராட்டை இந்த ‘தண்டட்டி’ மூலம் பெறுகிறார் இயக்குனர் ராம் சங்கையா.

நேர்மை தவறாக போலீஸ்காரர் பசுபதி. பணியிலிருந்து ஓய்வு பெற பத்து நாட்களே இருக்கும் நிலையில் ஒரு வழக்கு விசாரணையை அவர் மேற்கொள்கிறார். கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் தனது பாட்டியைக் காணவில்லை என ஒரு பேரனும், அம்மாவைக் காணவில்லை என நான்கு சகோதரிகளும் காவல் நிலையம் வருகிறார்கள். காணாமல் போன அந்த பாட்டி, அம்மா இருவரும் ஒருவரே, அவர்தான் ரோகினி. அவரைக் கண்டுபிடிக்கும் போது அடுத்த சில மணித் துளிகளில் அவர் இறந்து போகிறார். பாட்டியை அடக்கம் செய்யும் வரை கூடவே இருக்கும்படி பேரன் முகேஷ் கேட்டுக் கொண்டதால் கிடாரிப்பட்டிக்குச் செல்கிறார் பசுபதி. அங்கு ரோகினியின் தண்டட்டி காணாமல் போய்விடுகிறது. இரவு நேரத்தில் அது நடந்ததால் யார் எடுத்தது எனத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் விசாரணையில் இறங்குகிறார் பசுபதி. தண்டட்டியைத் திருடியவர்கள் கிடைத்தார்களா என்பதே மீதிக் கதை.

கிராமத்து வாழ்வியல், நகைச்சுவை, சென்டிமென்ட், காதல், கிராமத்துக் குசும்பு என அனைத்தும் கலந்த ஒரு படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கான்ஸ்டபிள் சுப்பிரமணி கதாபாத்திரத்தில் பசுபதி, தங்கப்பொண்ணு கதாபாத்திரத்தில் ரோகினி, பேரன் கதாபாத்திரத்தில் முகேஷ், குடிகார மகன் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா, தண்டட்டியை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் மகள்கள் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் மற்றும் ஊர் மக்களாக நடித்து சில காட்சிகளில் ஓரிரு வசனம் பேசியவர்கள் உட்பட அனைவருமே கதை நடக்கும் அந்த கிடாரிப்பட்டி வாழ் மக்களாகவே தெரிகிறார்கள். 

கேஎஸ் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை, மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு இயக்குனருக்கு பக்கபலமாய் அமைந்துள்ளது.

ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த கிடாரிப்பட்டிக்குள் நாமும் சென்றதைப் போன்ற ஒரு உணர்வைத் தந்திருக்கிறார் இயக்குனர். ஒரு சில சுவாரசியமற்ற காட்சிகளைத் தவிர்த்திருந்தால் அது படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கும்.
 

Tags: thandatti, pasupathy, rohini, ram sangaiya

Share via:

Movies Released On March 15