பாயும் ஒளி நீ எனக்கு – விமர்சனம்
24 Jun 2023
கார்த்திக் அத்வைத் இயக்கத்தில், விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா, தனஞ்செயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சிறிய ஐ.டி கம்பெனியை நண்பனுடன் சேர்ந்து ஆரம்பித்து நடத்தி வருபவர் விக்ரம் பிரபு. சிறு வயதில் ஏற்பட்ட சாலை விபத்தில் அவருக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. நல்ல வெளிச்சத்தில் கண்கள் தெரியும், குறைவான வெளிச்சத்தில் தெரியாது. ஒரு நாள் சிலரால் திடீரென கடத்தப்படுகிறார் விக்ரம் பிரபு. ஆனாலும் அவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார். அடுத்த சில நாட்களில் அவருடைய சித்தப்பா ஆனந்த் கொல்லப்படுகிறார். அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் தடுமாறுகிறார். தன்னுடைய கடத்தலுக்கும், சித்தப்பா கொலைக்கும் ஏதோ காரணம் இருக்கிறது என யூகித்து கொலையாளிகளைத் தேட ஆரம்பிக்கிறார். அவர்களைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
‘பாயும் ஒளி நீ எனக்கு’ என பாரதியார் பாடலில் இருந்து கதைக்கப் பொருத்தமான ஒரு தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். கதையாகப் புதிதாக இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை சேர்த்திருந்தால் ஒரு சிறப்பான கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இந்தப் படம் வந்திருக்கும். படம் ஆரம்பித்த அரை மணி நேரம் பிறகே விக்ரம் பிரபுவுக்கு பார்வை குறைபாடு இருக்கிறது என காட்டுகிறார் இயக்குனர். அதை ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்குப் புரிய வைத்திருந்தால் அவரது கதாபாத்திரத்தின் மீது அதிக அனுதாபம் கிடைத்திருக்கும். ஆனால், அதை விஷுவலாக மட்டுமே காட்டி வித்தியாசப்படுத்த நினைத்திருக்கிறார்.
விக்ரம் பிரபுவின் நடிப்பிலும், தோற்றத்திலும் இந்தப் படத்தில் நிறைய முன்னேற்றம் தெரிகிறது. பார்வை குறைபாடுள்ள கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். விக்ரம் பிரபுவுக்கு எப்போதும் துணையாக இருக்கும் நண்பனாக விவேக் பிரசன்னா, காதலியாக வாணி போஜன் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
தனஞ்செயா படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமா இயக்குனர்கள் இவரை இனி பயன்படுத்திக் கொள்ளலாம். வில்லத்தனத்தில் நன்றாகவே மிரட்டுகிறார். சன்னி – சாகேத் பின்னணி இசை ரசிக்க வைக்கின்றன. பாடல்களுக்கு சாகர் இசையமைத்திருக்கிறார்.
வில்லன் தனஞ்செயா பற்றிய காட்சிகளும், அவரின் தலைவனாக இருந்த வேல ராமமூர்த்தி காட்சிகளும் கூடுதலாக இருப்பதால் அவை மையக்கதையின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது. வில்லனைக் கொல்ல திட்டமிடும் அந்த கிளைமாக்ஸ் காட்சியின் யுத்தி வித்தியாசமாக இருந்தாலும் மிகவும் சினிமாத்தனமாக இருக்கிறது. இருப்பினும் போரடிக்காத விதத்தில் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
Tags: paayum oli nee enakku, vikram prabhu, vani bhojan