தலைநகரம் 2 – விமர்சனம்

24 Jun 2023

துரை விஇசட் இயக்கத்தில், சுந்தர் சி, பாலக் லால்வாணி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

2006ல் வெளிவந்த ‘தலைநகரம்’ படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். அப்படத்தில் நடித்த சுந்தர் சி கதாபாத்திரம் மட்டுமே இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது.

சென்னையின் மூன்று பிரபலமான தாதாக்கள். மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை என மூவர் அவரவர் இடங்களில் ரவுடியிசம் செய்து வருகிறார்கள். மூவருக்குள்ளும் அடுத்தவர் இடத்தைப் பிடிக்க கடும் போட்டி. இதனிடையே, முன்னாள் ரவுடியான சுந்தர் சியுடன் அவர்கள் மோதும் சூழல் ஏற்படுகிறது. மூவருமே தனித் தனியாக சுந்தர் சியைக் கொல்ல திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களது திட்டத்தை மீறி அவர்களையே ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்குகிறார் சுந்தர் சி. அது எப்படி என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாகத்தில் ரைட் கதாபாத்திரம் ரவுடி கதாபாத்திரமாக இருந்தாலும் கலகலப்பான ஒரு கதாபாத்திரமாக இருக்கும். ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் ரைட் கதாபாத்திரத்தை சீரியசாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அதனால், படம் முழுவதும் சீரியசாகவே இருக்கிறார் சுந்தர் சி. அவருடன் இருக்கும் தம்பி ராமையாவை போலீஸ் விசாரணை ஒன்றிலிருந்து காப்பாற்றுவதன் மூலம் அதிரடியில் களமிறங்குகிறார். கடைசி வரை அவருடைய ஆக்ஷனை விறுவிறுப்பாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பாலக் லால்வானி தான் படத்தின் கதாநாயகி. மனைவியி இழந்த நடுத்தர வயதைக் கடந்த சுந்தர் சியை ஒரு கட்டத்தில் நேசிக்க ஆரம்பிக்கிறார். மூன்று வில்லன்களாக பாகுபலி பிரபாகர், ஜெய்சி ஜோஸ், விஷால் ராஜன். மூவருமே தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாதவர்கள். மூவரில் பிரபாகர் மட்டுமே லோக்கலாக மிரட்டுகிறார். தம்பி ராமையா, ஆயிரா அப்பா, மகளாக சென்டின்மெட்டுக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசை பரவாயில்லை. சுந்தர் சியின் ஒவ்வொரு என்ட்ரிக்கும் ஒரே இசையயைக் கொடுத்திருக்கிறார். படத்தில் அதிக வேலை பார்த்திருப்பது ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக் மட்டுமே. 

‘தலைநகரம்’ முதல் பாகத்தில் வடிவேலு நகைச்சுவை பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்காக அவர் கிடைக்கவில்லை என்றாலும் வேறு ஒருவரை வைத்து நகைச்சுவையைச் சேர்த்திருக்கலாம். படம் முழுவதுமே சீரியசாக, ஆக்ஷனாக மட்டுமே நகர்கிறது.
 

Tags: thalainagarm 2, vz dorai, sundar c, ghibran, palak lalwani

Share via: