காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் - விமர்சனம்

03 Jun 2023

முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

தொடர்ந்து கிராமத்துப் படங்களையே இயக்கி வரும் முத்தையாவின் மற்றுமொரு கிராமத்துப் படம் இது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட சாதிப் பாசத்துடன் கூடிய படங்களை மட்டுமே எடுப்பது அவரது வழக்கம். இந்தப் படத்தில் அதைக் கொஞ்சம் மறந்து முஸ்லிம் மக்களுடன் இணக்கமாக இருப்து பற்றிய படமாகக் கொடுத்திருக்கிறார். அந்த ஒன்றைத் தவிர படத்தில் உள்ள மற்ற விஷயங்கள் பல படங்களில் பார்த்துப் பார்த்து புளித்துப் போனவை மட்டுமே.

சித்தி இத்னானியை அவரது சொத்துக்களுக்காக திருமணம் செய்து கொள்ள இரண்டு முறை மாமன்கள் போட்டி போடுகின்றனர். ஆனால், சித்தி இத்னானி, சிறையிலிருக்கும் ஆர்யாவைத் தேடிப் போய் பார்க்காமல் திரும்பி வருகிறார். அதனால், ஜாமீன் வாங்கி சித்தியைத் தேடி ஆர்யா வருகிறார். வந்த இடத்தில் சித்தியின் பிரச்சினகளைத் தெரிந்து கொண்டு அவருக்குத் துணையாக இருக்கிறார். அதன்பின் நடக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பும், காரணமும் இருக்கிறது என பல கதைகளைச் சொல்லி நம் பொறுமையை சோதிக்கிறார் முத்தையா.

பொருத்தமில்லாத ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்தில் ஆர்யா. தாடியும், மீசையும் மட்டும் வைத்துவிட்டால் கிராமத்து இளைஞனாக எப்படி மாறிவிட முடியும். சில காட்சிகளில் ஆர்யாவின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது. ‘சார்பட்டா பரம்பரை’யில் அசத்தியவரா இவர் என கேட்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளில் மட்டும் ஈடுபாட்டுடன் நடித்துள்ளார் ஆர்யா.

கிராமத்துப் பெண்ணாகவே மாறியிருக்கிறார் சித்தி இத்னானி. பாவாடை தாவணியில் பாந்தமாக இருக்கிறார். நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தால் தமிழில் முக்கிய இடத்தைப் பிடிக்கலாம்.

படத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்கள், அதில் சில பல வில்லன்கள். எல்லாருமே முரட்டு மீசையுடன் வந்தால் மிரட்டிவிடலாம் என இயக்குனர் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. வழக்கம் போல ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு கதாபாத்திரத்தில் பிரபு. இந்தப் படத்தில் சற்றே வித்தியாசம், அவரை முஸ்லிம் ஆகக் காட்டியிருப்பது.

ஜிவி பிரகாஷ்குமார் இசையில் ஒரு பாடல் மட்டுமே தேறுகிறது. சண்டைக் காட்சிகளுக்கு ஒரே மாதிரி அதிரடி இசையை வாசித்திருக்கிறார்.

படம் முடிந்த வெளியே வந்த பின் யாருக்கு யார் உறவு என்று யோசிப்பதற்குள் மூளைக்கு சோர்வு வந்துவிடுகிறது. 

Tags: Kathar Basha Endra Muthuramalingam, arya, muthaiah, siddi idnani, gr prakashkumar

Share via: