துரிதம் - விமர்சனம்
03 Jun 2023
சீனிவாசன் இயக்கத்தில், ஜெகன், ஈடன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.
சென்னையில் ஐ.டி. கம்பெனிக்காக கார் ஓட்டுபவர் ஜெகன். அவருடைய காரில் தினமும் அலுவலகம் சென்று வருபவர் ஈடன். ஜெகனுக்கு ஈடன் மீது காதல், ஆனால், அதை அவரிடம் சொல்லாமலேயே இருக்கிறார். இந்நிலையில் அப்பாவின் வற்புறுத்தலால் வேலையை விட்டு சொந்த ஊருக்குக் கிளம்புகிறார் ஈடன். ரயிலைத் தவறவிடும் அவர் ஜெகனுக்கு போன் செய்து அவரது பைக்கில் ஊருக்குச் சென்றுவிடுமாறு கேட்கிறார். வழியில் காதலை சொல்லிவிடலாம் என ஜெகனும் அதற்கு சம்மதிக்கிறார். இருவரும் போகும் போது வழியில் ஈடனை யாரோ கடத்தி விடுகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சாலைப் பயணக் கதைகள் எப்போதாவதுதான் வரும். அப்படி வந்துள்ள ஒரு படம்தான் இது. ஒரு சுவாரசியமான கதையாக படத்தை நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். பெரும் திருப்புமுனையான, அதிரடியான காட்சிகள் இல்லையென்றாலும் படம் போரடிக்காமல் நகர்கிறது.
ஒரு கார் டிரைவர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் ஜெகன். ஈடனிடம் எப்படியாவது காதலைச் சொல்லிவிட வேண்டுமென்று தவம் கிடக்கிறார். காணாமல் போன ஈடனைக் கண்டுபிடிக்க பரபரப்பாக அலைகிறார்.
அப்பாவுக்கு பயந்த பெண்ணாக இருந்தாலும், சென்னையில் சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறார் ஈடன். அதற்கும் அப்பா வெங்கடேஷ் வேட்டு வைக்க தன் கனவுகளைப் பறிகொடுத்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார். ஈடனை வெங்கடேஷ் அப்படி மிரட்டுவதற்குக் காரணமாக ஒரு பிளாஷ்பேக்கையும் வைத்திருக்கிறார்கள்.
காதலை சொல்லத் தடுமாறும் கதாநாயகர்ளைப் பற்றிய படங்களில் இதுவும் ஒன்று. கிளைமாக்ஸ் காட்சி நாம் எதிர்பார்க்காத விதத்தில் அமைந்துள்ளது. ஒரு காதல் பயணக் கதையைப் பார்த்த திருப்தி படம் பார்க்கும் போது கிடைக்கிறது.
Tags: thuritham, thuritham review, துரிதம், துரிதம் விமர்சனம்