உன்னால் என்னால் - விமர்சனம்

03 Jun 2023

கேஆர் ஜெயகிருஷ்ணா இயக்கத்தில், ஜெகா, உமேஷ், கேஆர் ஜெயகிருஷ்ணா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருகிறார்கள் இளைஞர்களான கேஆர் ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ். மூவருக்குமே மூன்று விதமான பிரச்சினைகள். சென்னையில் வேலை செய்து அதன் மூலம் சம்பாதித்து அந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மூவரும் ஒரே வீட்டில் தங்கும் சூழல் வருகிறது. சரியான வேலை கிடைக்காமல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒரு பெரிய டீலிங் முடியும் நிலையில் அது கைவிட்டுப் போகிறது. அந்த சமயத்தில் ரியல் எஸ்டேட் தாதாவான சோனியா அகர்வால், அவர்களை ஒரு கொலை செய்யச் சொல்கிறார். அப்படி செய்தால் அதற்கு பெரும் தொகை தருவதாகக் கூறுகிறார். மூன்று நண்பர்களும் தங்கள் பிரச்சினை தீர, பணத் தேவைக்காக அந்தக் கொலையை செய்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கிராமத்து இளைஞர்களாக இப்படத்தின் இயக்குனர் கேஆர் ஜெயகிருஷ்ணா, ஜெகா, உமேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஜெயகிருஷ்ணாவுக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை. அதே சமயம் ஜெகா, உமேஷ் இருவரும் ஓரளவிற்கு நடித்துள்ளார்கள். 

ரியல் எஸ்டேட் தாதா கதபாத்திரத்தில் சோனியா அகர்வால். ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார். தாதா கதாபாத்திரத்தில் அவர் துளி கூட செட்டாகவில்லை. மூன்று இளைஞர்களக்கும் தனித் தனியே மூன்று காதல் கதையும் படத்தில் உண்டு. சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஏதோ நடித்துவிட்டுப் போகிறார்கள்.

காமெடி செய்கிறேன் என வழக்கம் போல ரவி மரியா எதையோ பேசிவிட்டுப் போகிறார். ராஜேஷ், டெல்லி கணேஷ் போன்ற மூத்த நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள்.

கதை என்று பார்த்தால் குறை சொல்ல முடியாத ஒரு கதைதான். ஆனால், தள்ளாடும் திரைக்கதை, அரை குறையாக நடித்திருக்கும் முக்கிய கதாபாத்திரங்கள், சுவாரசியமில்லாத காட்சிகள் நம் பொறுமையை நிறையவே சோதிக்கின்றன.

Tags: unnaal ennal

Share via: