தீராக் காதல் - விமர்சனம்

27 May 2023

“அதே கண்கள், பெட்ரோமாக்ஸ்” படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கியிருக்கும் படம். ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, அம்ஜத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு தங்களது பழைய காதலை புதுப்பிக்கும் நாயகன், நாயகியைப் பற்றிய சில பல படங்கள் இதற்கு முன்பும் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. ‘மௌனராகம், சில்லுனு ஒரு காதல், ராஜா ராணி, 96, ’ ஆகிய படங்களும் அந்த மாதிரியான கதை கொண்ட படங்கள்தான். அந்த வரிசையில் இந்தப் படமும் இருந்தாலும, அந்தப் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

நாயகன், நாயகியின் பழைய காதல் எப்படிப்பட்ட என்பதை படத்தில் காட்டாமல் அதை அவர்கள் வசனங்கள் மூலம் மட்டும் பேசுவதால் நமக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாமல் கடந்து போகிறது.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் கல்லூரியில் படித்த போது காதலித்தவர்கள். பெற்றோர்கள் எதிர்ப்பால் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளிவர மறுக்கிறார். அதனால், காதலர்கள் பிரிகிறார்கள். பின்னர் ஜெய்க்கு ஷிவதாவுடன் திருமணம் நடந்து ஆறு வயதில் ஒரு மகளும் இருக்கிறார். ஐஸ்வர்யாவுக்கு அம்ஜத்துடன் திருமணம் நடந்து கணவரிடம் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெய், ஐஸ்வர்யா திடீரென சந்தித்துக் கொள்கிறார்கள். மீண்டும் பழைய காதலை புதுப்பித்து சுற்றுகிறார்கள். ஆனால், ஜெய் அது தவறு என உணர்ந்து விலகிப் போகிறார். கணவனை விட்டுப் பிரியும் ஐஸ்வர்யா, ஜெய்யை தன்னுடன் வந்துவிடும்படி வற்புறுத்துகிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

‘சுப்பிரமணியபுரம், ராஜாராணி’ என இதற்கு முன்பு ஜெய் நடித்து பெயர் வாங்கிய படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் இருந்தது. காதல் என்றால் மட்டும் ஜெய் கொஞ்சம் எளிதாக நடித்துவிடுவார் போலிருக்கிறது. இந்தப் படத்தில் ஒரு மெச்சூர்டான கதாபாத்திரம். ஒரு பக்கம் அன்பான மனைவி ஷிவதா, இன்னொரு பக்கம் மறக்க முடியாத முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ். இருவருக்கு இடையிலும் பேலன்ஸ் ஆக நடித்திருக்கிறார்.

காதலித்துப் பிரிந்த பெண்களுக்கு, அன்பான, பண்பான கணவன் அமையவில்லை என்றால் பழைய காதலனைப் பற்றிய நினைப்புகள், ஒப்பீடுகள் வந்து போகும். அப்படியான ஒரு மனச்சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கொடுமைக்கார கணவன் அம்ஜத்திடம் ஆவேசப்பட்டு அவரை அடித்துவிட்டு விலகி வருகிறார். கணவனிடம் கிடைக்காத அன்பு, அரவணைப்பு முன்னாள் காதலன் ஜெய்யிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ஜெய்யை கொஞ்சம் மிரட்டியும் பார்க்கிறார். திடீரென கொஞ்சம் ‘சைக்கோத்தனமாக’ இவரது கதாபாத்திரம் மாறுவது அதிர்ச்சிதான். இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் அதைச் சரி செய்திருக்கிறார் இயக்குனர்.

ஆறு வயது மகளுக்கு ஒரு அம்மா எப்படியிருப்பாரோ அந்த ‘ஆன்ட்டி’ தோற்ற கதாபாத்திரத்தை அவ்வளவு இயல்பாய் வெளிப்படுத்தியிருக்கிறார் ஷிவதா. ஒரு கம்பெனியில் எச்ஆர் ஆக இருப்பவர் எந்த அளவிற்கு முதிர்ச்சியான குணத்துடன் இருப்பார் என்பதும் அவரது நடிப்பின் மூலம் வெளிப்படுகிறது. ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் பற்றித் தெரிந்ததும் அவர் பொங்கும் காட்சிகளில் கோபத்தில் தெறிக்கவிடுகிறார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்த கொடுமைக்கார கணவனாக அம்ஜத்,  ஆலோசனை சொல்லும் நண்பனாக அப்துல் லீ.

சித்துகுமார் இசையில் நிறையவே ஏமாற்றுகிறார். பாடல்களும், பின்னணி இசையும் இந்தப் படத்தை இன்னும் தூக்கி நிறுத்தியிருக்க வேண்டும்.

முழுமையாக உணர்வுபூர்மான படமாக இல்லாமல், டிராமாத்தனமான காட்சிகளுடன் ஒரே இடத்தையே திரைக்கதை சுற்றிச் சுற்றி வருவது படத்தின் மைனஸ் பாயின்ட். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா மீதும், ஜெய் மீதும் நமக்கு அனுதாபம் வருவதை விட ஆத்திரம் வருகிறது. கிளைமாக்சில் மட்டும் கொஞ்சம் அட்வைஸ் சொல்லிவிட்டு அதுவரையிலும் என்னென்னவோ சொல்கிறார்கள்.
 

Tags: Theera Kaadhal, jai, aishwarya rajesh, shivadha, rohin venkatesan

Share via: