கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்
27 May 2023
ஜோதிகா நடித்து வெளிவந்த ‘ராட்சசி’ படத்தை இயக்கிய சை கௌதம் ராஜ் இயக்கியுள்ள படம். இமான் இசையமைப்பில், அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், ராஜசிம்மன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
அவரவர் சாதியைப் பற்றிப் பெருமை பேசும் சில படங்கள் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சாதி பெருமை பேசாமல் எந்த சாதியாக இருந்தாலும் சரி அவர்கள் நட்பாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்திச் சொல்லும் படம்.
மேலத் தெருவைச் சேர்ந்த அருள்நிதி, கீழத் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் பிரதாப் பள்ளி நாட்களிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்பு அருள்நிதியின் அப்பா யார் கண்ணனுக்குப் பிடிக்காது. அவர் ஒரு சாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியிடம் கேட்கிறார். கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்த ராஜசிம்மனின் கட்சிப் பதவி பறி போக சந்தோஷ் காரணமாக இருக்கிறார். அதனால், கோபத்தில் இருக்கும் ராஜசிம்மன், யார் கண்ணனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி சந்தோஷைக் கொன்று அந்தப் பழியை அருள்நிதி மீது போடுகிறார்கள். போலீசில் சிக்காமல் தப்பிக்கும் அருள்நிதி, தன் நண்பனைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கழுவேத்தி மூர்க்கனாக படத்தின் தலைப்பிற்கேற்ப மூர்க்கமாக ஒரு தாண்டவத்தையே நடத்தியிருக்கிறார் அருள்நிதி. அவரது அந்த பெரிய மீசையும், கண்களில் காட்டும் ஆவேசமும் அவரது கதாபாத்திரத்தின் மூர்க்கத்திற்கு அவ்வளவு பொருத்தமாய் அமைந்திருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் அப்படியே குழைந்து போகிறார்.
அருள்நிதியின் நண்பனாக சந்தோஷ் பிரதாப். இரண்டாவது கதாநாயகனாக நடித்தாலும் இப்படிப்பட்ட பெயர் சொல்லும் கதாபாத்திரங்கள் சிலருக்குத்தான் அமையும். அது சந்தோஷுக்கு அமைந்திருக்கிறது. அவரும் அருமையான, அன்பாக நடித்து அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்கள்.
அருள்நிதியின் காதலியாக துஷாரா விஜயன். காதல் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். இப்படி ஒரு யதார்த்தமான காதலையும், நடிப்பையும் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று. துஷாரா, தூள் கிளப்பீட்டிங்க.
பதவி வெறிக்காக பெற்ற மகன் மீதே கொலைப் பழியை சுமத்தி, அவரையே கொலை செய்யத் துடிக்கும் அரசியல் வெறி பிடித்த அப்பாவாக யார் கண்ணன். சாதி அரசியல் செய்யும் மாவட்டத் தலைவராக ராஜசிம்மன். சந்தோஷைக் காதலிக்கும் சாயா தேவி, அருள்நிதிக்கு எப்போதுமே உதவியாக இருக்கும் தாய்மாமன் முனிஷ்காந்த் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்தமாய் நடித்திருக்கிறார்கள்.
இமானின் பின்னணி இசை படத்திற்கு பலம். ஸ்ரீதர் ஒளிப்பதிவு, கணேஷ் சண்டைக் காட்சிகள் கூடுதல் பலம்.
படத்தின் ஆரம்ப அரை மணி நேரக் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சுவாரசியமில்லாமல் நகர்கிறது. அதன்பின் வரும் காட்சிகள், இடைவேளைக்குப் பிறகான படம் பரபரப்பாக நகர்கிறது. சாதி அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டியிருக்கும் படம்.
Tags: Kazhuvethi Moorkkan, Arulnithi, D Imman, SY Gowthama Raj, Dushara Vijayan, Santhosh Prathap