2018 - விமர்சனம்
27 May 2023
ஜுட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில், டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், லால், நரேன், கலையரசன், அபர்ணா பாலமுரளி, தன்வி ராம், ஷிவதா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் இந்த மாதம் 5ம் தேதி வெளியாகி சுமார் 140 கோடி வசூலைக் குவித்த படம் தமிழில் டப்பிங் ஆகி மே 26 வெளியாகியுள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் வாழ்வியல் சார்ந்த பல படங்கள் முத்திரை பதிப்பது வழக்கம். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலும் பல படங்கள் வந்துள்ளன. மழை வெள்ளத்தால், இடுக்கி அணை திறந்துவிடப்பட்ட நிலையில் ஊருக்குள் வெள்ளம் வந்து அதனால் மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றி அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் இது.
அந்த மழை வெள்ளத்தில் சாதி, மதம் பாராமல் பல உயிர்களைக் காப்பாற்றத் துடிக்கும் சில நிஜ ஹீரோக்களைப் பற்றிய படமும் கூட. சென்னையில் 2015ம் ஆண்டில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு அதனால், சென்னை மக்கள் பட்ட துயரங்களும் இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஞாபகம் வந்து போகிறது.
மரண பயத்தால் மிலிட்டிரியிலிருந்து ஓடி வந்த டொவினோ தாமஸ். மகனுக்கு பெண் கேட்டுச் சென்ற இடத்தில், மீனவர்கள் என்ற அவமானத்துடன் திரும்பிய அப்பா லால், அண்ணன் நரேன், வெள்ள கண்காணிப்புக் குழுவில் வேலை பார்க்கும் குஞ்சாக்கோ போபன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணியருடன் கேரளாவைச் சுற்றிக் காட்டச் செல்லும் அஜு வர்கீஸ், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பும் வினீத், கேரளாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து வெடிகுண்டுகளை எடுத்துச் செல்லும் லாரி டிரைவர் கலையரசன் ஆகியோர் பெரு மழை வெள்ளத்தை சந்திக்க நேரிடுகிறது. அதனால், அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை, அவற்றிலிருந்து அவர்கள் மீள்கிறார்களா, இல்லையா, மழை வெள்ளம் அவர்களது வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். வெள்ளக் காட்சிகளால் மட்டுமே இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் நிறைந்திருக்கின்றன. அக்காட்சிகளை எப்படி எடுத்தார்கள் என நம்மை மிகவும் வியக்க வைக்கிறது படம். படத்தில் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பும் அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு யதார்த்தமாய் அமைந்துள்ளது. வெள்ளத்தைப் பற்றிய படமென்றாலும் அதில் ஒரு அழகான காதல், கணவன் -மனைவி உறவு, பிரிவு, சில அழுத்தமான சென்டிமென்ட் காட்சிகள் என உணர்வுபூர்வமான படமாகவும் உள்ளது.
படத்தில் பல நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தாலும் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பதில் மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருந்திருக்கிறது. வினீத், குஞ்சாக்கோ, கலையரசன், அபர்ணா பாலமுரளி சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் மேலோட்டமாக கடந்து போகின்றன. வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் சில காட்சிகள் நீண்ட நேரம் காட்டுப்படுவதும் சிறு குறையாக உள்ளது. ஆனாலும், படம் முடிந்த பின் நம்மை சீட்டை விட்டு சீக்கிரம் எழச் செய்யாமல் கட்டிப் போடுகிறது படம். மறக்க முடியாத மலையாளத் திரைப்படங்களில் இந்தப் படத்திற்கு நிச்சயம் இடமுண்டு.
Tags: 2018, Tovino Thomas, Lal, Narain, Aparna Balamurali, Kalayirasan, Aju Varghese, Vineeth Sreenivasan, Kunchacko Boban