உறியடி 2 - விமர்சனம்

07 Apr 2019
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில்தான் கடந்த சில வருடங்களாக மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளாக ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய், என கெமிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதனால், இந்த ‘உறியடி 2’ படத்தைப் பல மக்களும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பாக இந்தப் படத்தைப் பார்த்து சில பல அரசியல் உண்மைகளை உணர முடியும். அந்த அளவிற்கு தெள்ளத் தெளிவான காட்சிகளுடன், வசனங்களுடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜயகுமார். செங்கதிர்மலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள ‘பாக்சினோ’ என்ற கெமிக்கல் ஆலை வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்தை உற்பத்தி செய்கிறது. அந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறார் கெமிக்கல் என்ஜினியரிங் முடித்த விஜயகுமார். அந்த ஆலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ‘எம்ஐசி’ என்ற நச்சு வாயு கசியும் ஆபத்துடன்தான் கம்பெனி செயல்பட்டு வருகிறது. ஒரு நாள் அந்த வாயுக் கசிவால், விஜயகுமார் நண்பர் ஒருவர் உட்பட சிலர் இறந்து போகிறார்கள். கம்பெனியை மூட ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறார் விஜயகுமார். ஆனால், கம்பெனி நிர்வாகம் அந்தப் பகுதி ஆளும் கட்சி, சாதிக்கட்சி தலைவர்களை விலைக்கு வாங்கி கம்பெனியை தொடர்ந்து நடத்துகிறது. ஆனால், பெரிய அளவிலான வாயுக் கசிவு நடைந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். அதன் பின் வீறு கொண்டு எழுகிறார் விஜயகுமார். அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் பரபரப்பான கிளைமாக்ஸ். ஒரு காதல் கதையாக ஆரம்பமாகும் படம் போகப் போக, மக்கள் பிரச்சினை, அரசியல், போராட்டம் என பல திருப்பங்களுடன் நகர்கிறது. விஜயகுமார் இயக்கி, எழுதி, நாயகனாகவும் நடித்து அவருடைய சமூக அக்கறையை வெளிக்காட்டுகிறார். அவருடைய தோற்றமும், நடிப்பும் பக்கத்து வீட்டுப் பையன் போல் யதார்த்தமாக அமைந்துள்ளது. கதாநாயகியாக விஸ்மயா. விஜயகுமாருக்கு உதவும் காதலியாக நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவை சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளன. கம்பெனி முதலாளி ராஜ் பிரகாஷ், ஆளும் கட்சி அரசியல்வாதி ஆனந்த்ராஜ், சாதி சங்கத் தலைவர் சங்கர் மூவரும்தான் படத்தின் வில்லன்கள். வழக்கமான நடிகர்கள் இல்லாமல் புதுமுகங்களாக இவர்கள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தைத் தருகிறது. கோவிந்த் வசந்தா இசையமைப்பில் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு கூடுதல் உத்வேகத்தைத் தருகிறது. குறிப்பாக பின்னணி இசையில் காட்சிகளின், வசனங்களின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்குகிறார் கோவிந்த். ஆனால், சில காட்சிகளில் வசனங்களைக் கேட்கவிடாமல் பின்னணி இசையின் சவுண்ட் அதிகமாக உள்ளது. அறிவியில் தெரியாத மக்களுக்கு கெமிக்கல் பெயர்கள் இடம் பெறுவதும், அவை என்னென்ன கெடுதலைச் செய்யும் என்பதும் புரியவே புரியாது. கெமிக்கல் ஆலைகள் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தெளிவான முடிவு படத்தில் இல்லை. பாதுகாப்பு அம்சங்களுடன் அப்படிப்பட்ட கம்பெனிகளை நடத்துவது தவறில்லை என்ற புரிதல் இயக்குனரிடம் மறைமுகமாகத் தெரிகிறது. ஆனால், அவரே படத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பலர் தவறு செய்வதையும் காட்டியிருக்கிறார். இப்படி சில முரண்கள் படத்தில் இருக்கின்றன. கிளைமாக்ஸ் முன்பாக வரை ஒரு யதார்த்தமான படம் போலத் தெரியும் படம், பின்னர் பழைய கமர்ஷியல் படங்கள் போல சினிமாத்தனமாக முடிவது அதிர்ச்சியாக உள்ளது. இருந்தாலும் சமூக அக்கறை கொண்ட படங்களை இந்தக் கால இளம் படைப்பாளிகளும் கொடுக்க முன்வருவது பாராட்டுக்குரியது.

Tags: uriyadi

Share via: