ஒரு கதை சொல்லட்டுமா - விமர்சனம்
07 Apr 2019
ஆஸ்கர் விருது வென்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, கேரள மாநிலம், திருச்சூரில் நடக்கும், பிரம்மாண்டமான பூரம் விழாவை ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியப் பணியை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இதை ஒரு டாகுமென்டரியாகவும், கொஞ்சம் டிராமா எபெக்டிலும் படமாக்கியிருக்கிறார்கள். மும்பையில் இருக்கும் ரசூல் பூக்குட்டியை அந்த விழாவை ஒலிப்பதிவு செய்து கொடுக்கும் வேலைக்காக வரவழைக்கிறார் தயாரிப்பாளரான அஜய் மாத்யூ. ஆனால், அவர் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியை அதிகமாகவே அவமானப்படுத்துகிறார். காட்சிக்குக் காட்சி இருவரும் ‘ஈகோவால்’ மோதிக் கொள்கிறார்கள். அதிலும் அஜய் மாத்யூ பேசும் வசனங்கள் ஓவராகவே உள்ளன.
அந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு வாத்திய இசையையும், சத்தங்களையும் ஒலிப்பதிவு செய்ய வரும் ரசூல் பூக்குட்டி, ஒரு டாகுமென்டரி இயக்குனராகவே மாறி திருவிழாவில் கலந்து கொள்ளும் மற்ற கலைஞர்களைப் பற்றித்தான் படமாக்குகிறார். அதற்குப் பதிலாக, அந்தத் திருவிழாவை ஒலிப்பதிவு செய்ய எத்தனை மைக்குகள் வைக்க வேண்டும், அவற்றை எப்படியெல்லாம் பொருத்தி, ஒலிப்பதிவு செய்வார்கள் என்பதைக் காட்டியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
ரசூல் பூக்குட்டி முடிந்த வரை நடிக்க முயற்சித்திருக்கிறார். அவருடைய நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தைப் போலவே சினிமா கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். அதைவிடுத்து அவர் அவமானப்படுத்தப்படுவது போன்ற காட்சிகள் அவர் மீதான மதிப்பைக் குறைக்கும் காட்சிகள்.
அஜய் மாத்யூ, ஒரு தயாரிப்பாளர் அவருக்குப் பிடிக்காதபடி மற்றவர்கள் நடந்து கொண்டால் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதைக் காட்டுகிறார்.
படத்தில் உள்ள திருவிழா இசையமைப்புகள் ஒவ்வொன்றும் நம்மையும் ஆடவைக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன.
சொன்ன கதையை முற்றிலும் பாசிட்டிவ்வாக சொல்லியிருக்கலாம். ஒரு சினிமாவைப் போல பார்க்க முடியாத குறை இருந்தாலும் ஒரு திருவிழாவை நேரில் பார்த்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.
Tags: oru kathai sollattuma