நட்பே துணை - விமர்சனம்

07 Apr 2019
விளையாட்டை மையமாக வைத்து வரும் தமிழ்ப் படங்கள் மிகவும் குறைவு. அதிலும் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் முதன் முதலில் வைத்து வந்துள்ள படம்தான் ‘நட்பே துணை’. இந்தியாவில் விளையாட்டு என்றாலே அதில் அரசியல் இருக்கும். அப்படி ஒரு அரசியலால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் சர்வதேச ஹாக்கி வீரர், அந்த ஹாக்கியே வேண்டாமென ஒதுங்கிப் போகிறார். ஆனால், ஒரு விளையாட்டு மைதானத்திற்காக நடக்கும் அரசியல் அவரை மீண்டும் ஹாக்கி விளையாட வைக்கிறது. அவரால்தான் அந்த மைதானம், தனியார் நிறுவனம் கையில் சிக்காமல் காப்பாற்றப்பட வேண்டும். அவர் அதைச் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. இளம் வயதிலேயே இந்திய அணியின் ஹாக்கி அணியில் இடம் பிடித்தும், அரசியல் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போன விளையாட்டு வீரராக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கிறார். நன்றாக விளையாடியும் அணியில் இடம் பிடிக்க முடியாத காரணத்தால் அவருடைய நண்பர் தற்கொலை செய்து இறந்து போக, அதற்குக் காரணமானவர்களைத் தட்டிக் கேட்டதால் அவரும் அணியிலிருந்து கழட்டிவிடப் போகிறார். இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டும் ஆதிக்கு நடிக்க வாய்ப்பு. மற்ற காட்சிகளில் அப்படியே வந்து போகிறார். கிளைமாக்சில் மீண்டும் ஹாக்கி விளையாடி அசத்துகிறார். புதுமுகம் அனகாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் ஆதி. அந்த அளவிற்கு அனகாவும் அழகாகத்தான் இருக்கிறார். நடிக்க அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் கவனத்தை ஈர்க்கிறார் அனகா. மைதானத்தைக் காப்பாற்ற தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்யும் ‘டெடிகேடட்’ கோச்சாக ஹரிஷ் உத்தமன். தற்காலை அரசியலை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் விளையாட்டுத் துறை அமைச்சராக கரு.பழனியப்பன். படத்தில் பல யு டியுப் பிரபலங்கள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் அந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதுதான் உண்மை. அதற்கான சரியான வாய்ப்புகள் அவர்களுக்குப் படத்தில் இல்லை. ஆதியின் இசையில், பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. முழு கதையும் காரைக்காலில் நடக்கிறது. படத்திற்கான லொகேஷன்களை இன்னும் அருமையாகத் தேர்வு செய்திருக்கலாம். இந்தக் காலத்தில் அரசியலும், விளையாட்டும் இரண்டறக் கலந்துள்ளன. அதை இந்தக் கால ரசிகர்களுக்குப் பொருத்தமான விதத்தில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

Tags: natpe thunai

Share via: