அக்னி தேவி - விமர்சனம்
23 Mar 2019
ஒரு கொலை, அதற்கான காரணம் என்ன, பின்னணி என்ன, என்பதைக் கண்டுபிடிக்க முயலும் ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணைதான் இந்த ‘அக்னி தேவி’.
இயக்குனர்கள் ஜேபிஆர் - ஷாம் சூர்யா இணைந்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்கள். படத்தின் நாயகன் பாபி சிம்ஹாவே இந்தப் படம் வெளிவரக் கூடாது என வழக்கு தொடுத்து படத்தின் வெளியீட்டைத் தடுக்க முயற்சித்த சம்பவம் இந்தப் படத்தில் உள்ள கதையை விட விறுவிறுப்பான ஒரு உண்மைச் சம்பவம்.
போலீஸ் அதிகாரி பாபிசிம்ஹாவை பேட்டி எடுக்க வரும், ஒரு தொலைக்காட்சி பெண் நிருபர் கொலை செய்யப்படுகிறார். அந்தப் பெண் நிருபர், பாபியின் மனைவி ரம்யா நம்பீசன் வேலை செய்யும் டிவியில் வேலை பார்ப்பவர். அதனால், அந்தக் கொலையை விசாரிக்கச் செல்கிறார் பாபி சிம்ஹா. விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை அவர் கண்டறிகிறார். குற்றவாளியான பெண் அரசியல்வாதி மதுபாலாவை சட்டத்தின் முன் நிறுத்த முயல்கிறார் பாபி. ஆனால், ஆட்சி, அதிகாரம், பதவி ஆகியவற்றால் தடுக்கப்படுகிறார். முடிவு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
பொதுவாகவே, ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு ஹீரோ நடித்தால் அந்தக் கதாபாத்திரத்திற்காகவாவது விறைப்பாக இருப்பார்கள். ஆனால், அக்னி என்று பெயர் வைத்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பாபியின் நடிப்பில் துளி கூட அனல் தெறிக்கவில்லை. ஏதோ, ஒரு கடமைக்கு நடித்தது போலவே இருக்கிறது. தேசிய விருது பெற்ற ஒரு நடிகர் இப்படியா நடிப்பது..?.
பாபிக்குப் பிறகு படத்தில் அதிக காட்சிகளில் வருவது மதுபாலா. பெண் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். ஹிந்தி சீரியல் வில்லி மாதிரி இருக்கிறார். அவரைப் பார்த்து அவரது கட்சிக்காரர்கள் கும்பிடுவதும், கைகட்டி நிற்பதும் தமிழக அரசியலை ஞாபகப்படுத்துகிறது. மதுபாலாவை படத்தில் மாற்றுத் திறனாளியாகக் காட்டுகிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. உட்கார்ந்து கொண்டே நடிப்பதால் ஓவராகவே நடித்திருக்கிறார் மதுபாலா.
பாபியின் நிழலாய் கூடவே இருக்கும் உதவி அதிகாரியாக சதீஷ். பாபியின் பிரிந்து வாழும் மனைவியாக ரம்யா நம்பீசன். இருவருக்கும் இடையே சில காட்சிகளை வைத்து பின்னர் எடுக்காமல் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.
ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் த்ரில்லர் படத்திற்குண்டான பரபரப்பை விட இரைச்சல்தான் இருக்கிறது. இம்மாதிரியான படங்களில் டெக்னிக்கல் விஷயங்கள்தான் இயக்குனருக்குக் கை கொடுக்க வேண்டும்.
ராஜேஷ்குமார் நாவலைப் படமாக எடுத்திருக்கிறார்கள். அவருடைய நாவலைப் படிப்பதற்கே ஒரு பரபரப்பும், விறுவிறுப்பும் இருக்கும். அதை படமாகப் பார்க்கும் போது எப்படியிருந்திருக்க வேண்டும்...?.