எம்பிரான் விமர்சனம்
22 Mar 2019
பழகிய காதல், பார்த்தும் பேசாத காதல், பழகாத காதல், பார்க்காத காதல் என பல காதல் கதைகள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. காதலை கவித்துவமாகச் சொல்லும் காதல் படங்கள் மறக்க முடியாத படங்களாக அமைந்துள்ளன.
இந்தப் படத்தின் இயக்குனர் கிருஷ்ண பாண்டி, ஒரு அழகான காதல் கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். காதலியையும் மிக அழகாகக் காட்டியிருக்கிறார், காதலனையும் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘எம்பிரான்’ என்றென்றும் மறக்க முடியாத ஒரு காதல் படமாக அமைந்திருக்கும்.
காதலை பொதுவாக நண்பர்கள்தான் சேர்த்து வைப்பார்கள். இதைத்தான் பல தமிழ்ப் படங்களில் காலம் காலமாக பார்த்து வருகிறோம். ஆனால், இந்தப் படத்தில் ஒரு ஆத்மா காதலுக்கு கனவில் தூது போய் காதலை சேர்த்து வைக்கப் பாடுபடுகிறது. இதுதான் இந்தப் படத்தில் உள்ள புதுமையான ஒரு விஷயம்.
ரெஜித் மேனன் கல்யாண வயதில் இருக்கும் ஒரு டாக்டர். அம்மாவுடன் வசித்து வருகிறார். அவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார் ராதிகா ப்ரீத்தி. ஆனால், தன் காதலைப் பற்றி அவர் ரெஜித்திடம் சொன்னதே இல்லை. அதைச் சொல்வதற்குள் ஒரு விபத்தில் சிக்கி, தன் நினைவுகளை இழந்து, கை, கால் செயலிழந்து படுத்த படுக்கை ஆகிறார். ரெஜித்துக்கு அடிக்கடி கனவில் ஒரு பெண்ணும், ஒரு தாத்தாவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கனவில் வருவது ராதிகாதான் என்பதைக் கண்டுபிடித்து விடுகிறார். ராதிகா தன்னைக் காதலித்திருப்பதைப் பற்றித் தெரிந்து கொள்கிறார். ராதிகாவிற்கு சிகிச்சை அளித்து அவரை பழையபடி மீட்க நினைக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
ஒரு டாக்டர் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறார் ரெஜித் மேனன். லேசான சிரிப்பு, இயல்பான தோற்றம் என அந்தக் கதாபாத்திரத்திற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவர் போலிருக்கிறார்.
படத்தை தன் அழகால் அதிகம் ரசிக்க வைப்பர் அறிமுக நாயகி ராதிகா ப்ரீத்தி. ஒளிப்பதிவாளருக்கு ராதிகா மீது அவ்வளவு பாசம் போலிருக்கிறது. எண்ணற்ற குளோசப் காட்சிகளை எடுத்துத் தள்ளியிருக்கிறார். ஹீரோவைச் சுற்றி வரும் ஹீரோயின் கதாபாத்திரம் அரிதான ஒன்று. அதை தன் நடிப்பால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் ராதிகா ப்ரீத்தி.
படத்தில் நாயகன், நாயகியைத் தவிர, நாயகனின் அப்பா கல்யாணி நடராஜன், நாயகியின் தாத்தா மௌலி ஆகியோர்தான் முக்கிய கதாபாத்திரங்கள். இப்படி நான்கு கதாபாத்திரங்களுக்குள் படம் நகர்ந்துள்ளது.
படத்தில் நகைச்சுவை என்பது மருந்துக்குக் கூட இல்லை. பிரசன்னாவின் இசையில் இரண்டு, மூன்று டூயட் பாடல்கள் இனிமையாக அமைந்திருந்தால் படத்திற்கு இன்னும் சிறப்பைச் சேர்த்திருக்கும்.
சில காட்சிகளின் நீளத்தைக் குறைத்து, சில காட்சிகளில் விறுவிறுப்பைச் சேர்த்திருந்தால் எம்பிரான் இன்னும் பிரமாதமான வரவேற்பைப் பெற்றிருக்கும்.
எம்பிரான் - ஆத்மார்த்தமான காதல்