நெடுநல்வாடை விமர்சனம்
17 Mar 2019
‘நெடுநல்வாடை’ என்பதை பள்ளியில் படிக்கும் நாட்களில் படித்தது. அதனால், என்ன அர்த்தம் என விக்கிபீடியாவைத் தேடிய போது, “வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்,” எனக் கிடைத்தது.
ஆம், இந்தப் படமும் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் கதை என்றும் சொல்லாம். தலைவியைப் பிரிந்து வாடும் தலைவனின் கதை என்றும், பேரனைப் பிரிந்து வாடும் தாத்தாவின் என்றும் சொல்லலாம்.
இயக்குனர் செல்வகண்ணன் ஒரு இயல்பான, உணர்வுபூர்மான மண் மணம் மாறாத படத்தைக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு கிராமத்துப் படத்தைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது. பாரதிராஜாவுக்குப் பிறகு கிராமத்தையே ஒரு உணர்வுடன் காட்டியது செல்வகண்ணன் என்று சொன்னால் அது மிகையில்லை.
அதற்கு அந்தக் கிராமத்து மனிதர்களாக நடித்த பூ ராம், இளங்கோ, அஞ்சலி நாயர், செந்தி, ஐந்து கோவிலான், அஜய் நடராஜ், மைம் கோபி என அனைவருமே காரணம். ஒவ்வொருவரையும் அவரவர் கதாபாத்திரங்களில்தான் பார்க்க முடிகிறது.
செல்லையா என்ற தாத்தாவாக, பாசமான அப்பாவாக பூ ராம், தாத்தாவின் ஆதரவில் வளர்ந்த கிராமத்து இளைஞன் இளங்கோவாக இளங்கோ, சிறு வயதிலிருந்தே இளங்கோ மீது காதலுடன் இருக்கும் அமுதாவாக அஞ்சலி நாயர், தங்கையின் வாழ்வு முக்கியம், குடும்ப மானம் முக்கியம் என நினைக்கும் அண்ணன் மருதுபாண்டியாக அஜய் நடராஜ், ஊரில் எவ்வளவோ பேர் இருந்தாலும் ஒருவர் மட்டுமே நம் நம்பிக்கைக்குரியவராக இருப்பார், அப்படிப்பட்ட ஒருவர் நம்பியாக ஐந்து கோவிலான், ஒரு பக்கம் வெறுப்பைக் காட்டும் அண்ணன் மைம் கோபி, மறுபக்கம் பாசம் காட்டும் அப்பா, இன்னொரு பக்கம் மகன், மகள் என கிராமத்துத் தாயாக செந்தி என இப்படத்தின் கதாபாத்திரங்களைப் பார்க்கும் போது அதற்காக நடிகர்களா, நடிகர்களுக்காக கதாபாத்திரங்களா என கேட்கத் தோன்றும். அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களில் அப்படியே வாழ்ந்து நம்மைத் திரையில் கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறார்கள்.
கணவன் சரி இல்லாததால் அப்பா வீட்டுக்கு தன் இரண்டு குழந்தைகளுடன் வருகிறார் மகள் செந்தி. காதல் கல்யாணம் செய்து கொண்டு ஓடிப் போனாலும், அப்பா பூ ராம் மகளுக்கு ஆதரவு தருகிறார். அண்ணன் மைம் கோபியோ, தங்கை சொத்துக்குப் பங்கு கேட்க வந்துவிடுவாளோ என எதிர்க்கிறார். பேரன் இளங்கோ வளர்ந்து பாலிடெக்னிக்கில் படிக்கும் போது அஞ்சலி நாயர் மீது காதல் கொள்கிறார். உன் வாழ்க்கை நிலைமையை நினைத்துப் பார், அதன்பின்தான் காதல் என்கிறார் தாத்தா. பேரன் இளங்கோ தாத்தா பேச்சைக் கேட்கிறாரா, மீறுகிறாரா என்பதுதான் படத்தின் கதை.
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்துக்குள் இருக்கும் நடக்கும் நிகழ்வுகளை அந்த வீட்டிற்குப் பக்கத்தில் இருந்தே நாம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை படம் முழுவதும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அந்தக் கிராமத்தில் நாமும் வசிப்பது போல காடு, கழனி, மலை, மேடு, தெரு என நம்மை கூடவே அழைத்துச் செல்கிறார்கள் படம் சம்பந்தப்பட்ட அனைவரும்.
படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சில கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால், அவற்றையும் மீறி நம்மை படத்துக்குள் ஈர்க்கும் பல விஷயங்கள் இருப்பதால் அவை பெரிதாகக் கண்ணில் படவில்லை.
ஜோஸ் பிரான்க்ளின் இசை, வைரமுத்து பாடல்கள், வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு, காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பு படத்துக்கு கூடுதல் பலத்தைத் தந்திருக்கிறது.
50 தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து அவர்களுடைய நண்பன் செல்வகண்ணனுக்காக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணமும் பெரிது, இயக்குனரின் கைவண்ணமும் இனிது.
நெடுநல்வாடை போல நூறு திரைப்படங்கள் வந்து தமிழ் சினிமாவை வாழ வைக்கட்டும்.