இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - விமர்சனம்
17 Mar 2019
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என படத்திற்கு எதற்கு தலைப்பு என்பது புரியவில்லை. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பெயரை வைத்திருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகும் எதற்கு அந்தப் பெயர் என்று புரியவில்லை. இதய ராணி என்பது வேண்டுமானால் ஓகே, காதலியைப் பொதுவாகச் சொல்லிவிடலாம்.
காதலை தமிழ் சினிமா இயக்குனர்கள் மென்மையாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்தக் காதலை முரட்டுத்தனமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு ஆக்ஷன் படத்துக்குரியா ‘ரா’வான பின்னணி, லைட்டிங் என விஷுவலாக ஒரு உலகத்தைக் காட்டிவிட்டு அதற்குள் காதலை வைத்திருக்கிறார். ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் சில காட்சிகள் சுவாரசியமாய் இருக்கின்றன, சில காட்சிகள் எதற்கு என்று கேட்க வைக்கின்றன.
ஹரிஷ் கல்யாண் நண்பர்கள் மகாபா ஆனந்த், பால சரவணன் ஆகியோருடன்தான் அதிக நேரம் இருப்பார். வீட்டுக்கே போக மாட்டார். அப்பாவுடன் பேச மாட்டார். சிறு வயதில் அம்மா தன்னை விட்டு வேறு ஒருவருடன் ஓடிவிட்டதால் வந்த கோபம் அது. எப்போதும் முரட்டுத்தனமாக, கோபமாகவே இருப்பவர். அதுவே நாயகி ஷில்பா மஞ்சு நாத்துக்குப் பிடித்துப் போக தனக்கென்று நிச்சயமான பின்னும், ஹரிஷைக் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிஷை விட்டுப் பிரிய முடிவெடுத்து, தனக்கு நிச்சயமான முறைப் பையனையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஷில்பா. அதற்கு என்ன காரணம், காதலர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மீதிப் படம்.
‘பியார் பிரேமா காதல்’ வெற்றிக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் மீதும் ஒரு எதிர்பார்ப்பு. முரட்டுத்தனமான இளைஞராக இந்தப் படத்தில் நடிப்பில் குறை வைக்கவில்லை ஹரிஷ். அதிரடிப் பேச்சும், வெறுப்பான பார்வையும் என அடுத்து ஆக்ஷன் ஹீரோவுக்கு ஒரு ரூட்டு போடுகிறார்.
ஷில்பா மஞ்சுநாத் 2019ன் மாடர்ன் காதலி. தோற்றத்தில் கொஞ்சம் மெச்சூர்டாகத் தெரிந்தாலும், நடிப்பில் காதல் ரசம் சொட்டச் சொட்ட நடித்திருக்கிறார்.
மகாபா ஆனந்த், பால சரவணன் நாயகனின் வழக்கமான நண்பர்கள்தான் என்றாலும், படத்தை கலகலப்பாக நகர்த்துவதில் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
ஹரிஷ், ஷில்பா இருவரும் சந்திக்கும் போதெல்லாம் காதலிப்பதை விட பேசுவதுதான் அதிகமாக இருக்கிறது. இடைவேளைக்குப் பின் படம் எப்படியெப்படியோ நகர்கிறது. காதலர்களுக்குள் இருக்கும் மோதல்கள்தான் இடைவேளையை நிரப்புகிறது. அவர்கள் இருவரும் பிரிந்து விடுவார்களோ என்ற உணர்வு நமக்கு எங்குமே வரவில்லையே ஏன் ?. காதல் படத்தைப் பார்க்கும் போது நமக்கு அதுதானே அதிகம் வர வேண்டும்.
சாம் சிஎஸ் பின்னணி இசையில் கவனம் செலுத்திய அளவிற்கு பாடல்களில் செலுத்தவில்லை. ஒரு காதல் படத்தில் ஒரு பாடல் கூட கேட்கும்படி இல்லை என்பது அவர் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
குடி, போதை, கஞ்சா என தமிழ் மக்களுக்கு அதிகம் தெரியாத, வேறு ஒரு வாழ்க்கை வாழும் இருவரின் காதல் கதை என்பதால் இந்த இதய ராணி இதயத்தை ஈர்க்காமல் தூர நிற்கிறதோ எனத் தோன்றுகிறது.